தமிழ் செய்திகள்  /  Astrology  /  Deepam Was Lit On The Top Of Palani Hill And Worship Was Conducted

Palani Murugan: பழனி பாலதண்டாயுதபாணிக்கு கார்த்திகைத் திருவிழா!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2022 06:50 PM IST

அக்னி சொரூபமாக விளங்கும் கார்த்திகேயனுக்கு பழனி மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

கார்த்திகைத் திருவிழா
கார்த்திகைத் திருவிழா

மூன்றாம் படை வீடுகள் சாலை பலருக்கும் நினைவில் வருவது பழனி மலை முருகன் கோயில். ஆனால் மூன்றாம் படை வீடு என்பது பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயில் தான் என்பது பலருக்கும் தெரியாது.

முதலில் உலகை சுற்றி வருபவர் ஞானப்பழம் கிடைக்கும் என்று கூறிய தனது தாய் தந்தையிடம் இருந்து பழம் கிடைக்காததால் கைலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு வந்து அமர்ந்த இடமே இந்த திருஆவினன்குடி தலமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான வராக மலை மற்றும் கொடைக்கானல் மலைத்தொடர் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இயற்கை வனப்புடன் அமைந்துள்ள இந்த இடமானது சித்தன் வாழ்வு, திருஆவினன்குடி என்று பல்வேறு பெயர்கள் பெற்றாலும் தற்போது பழனி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

குழந்தை வடிவில் மயில் மீது அமர்ந்திருப்பதால் இவர் குழந்தை வேலாயுத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். நெல்லி மரம் இந்த கோயிலில் தல விருட்சமாகும். நாகலிங்க மரம் இந்த கோயிலின் இன்னொரு சிறப்பு. இந்த ஆலயத்தின் தீர்த்தம் சரவண பொய்கை.

பெருமாளால் புறக்கணிக்கப்பட்ட லட்சுமி இந்த ஆலயத்தில் தவம் இருந்து மீண்டும் தன்னை பெருமாளோடு இணைத்து கொண்டதாக கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் உடைய பழனி திருஆவினன்குடி கோயில் செவ்வாய் கிரகத்தின் நேர்கோட்டில் உள்ளதால் செவ்வாய் கிரகத்தின் அதிபதியான அங்காரனை வழிபட்டு மனதார பிரார்த்தனை செய்தால் திருமண தடை, குழந்தையின்மை, தொழில் பிரச்னை உள்ளிட்ட இடர்பாடுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த திருஆவினன்குடி கோயில் 18 ஆம் நூற்றாண்டில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பழனியப்பன் செட்டியார் மற்றும் சுப்ரமணிய செட்டியார் ஆகியோரால் புனரமைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு பழனி ராமநாதன் செட்டியார் என்பவரால் தற்போதுள்ள கம்பீரமான ராஜகோபுரம் கட்டப்பட்டது.

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்களின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு முருகன் அருளை பெற்றுச் செல்கின்றனர்.

WhatsApp channel