Thoothukudi Floods: ’நாளை தூத்துக்குடி வெள்ளத்தை பார்வையிட செல்கிறேன்’ தமிழிசை ட்வீட்!
Dec 24, 2023, 09:12 PM IST
“Tamilisai Soundarajan: நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நிலையில், நாளை தமிழிசை தூத்துக்குடி செல்கிறார்”
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிட உள்ளதாக தெலங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்க கோரி கோரிக்கை வைத்தார். மேலும் தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் பார்வையிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மக்களை பார்க்க உள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், ”நாளை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு பயணம் செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளை சந்தித்து, ஆதரவற்றவர்களுக்கு உதவி வழங்குகிறேன். நான் தெலுங்கானாவில் இருந்து நிலைமையை தொடர்ந்து பின்பற்றி வந்தாலும்.... நாளை நேரில் சென்று பார்க்க திட்டமிட்டுள்ளேன்.. அவர்களின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள் .. மழைக்கு பிந்தைய சுகாதார அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தமிழிசை தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்