Bus Strike: பஸ் ஸ்டிரைக் வாபஸ்.. உடனே அமைச்சர் கொடுத்த முக்கிய அறிவிப்பு!
Jan 10, 2024, 05:30 PM IST
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து, வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், நாளை உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," நீதிமன்ற உத்தரவை அறிந்து, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு எப்போதும் அரசு தயாராகவே இருந்தது, இருக்கிறது. முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜன.19 ஆம் தேதி தொழிலாளா் நலத்துறை சார்பில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.
போக்குவரத்து ஊழியா்கள் வைத்த 6 அம்ச கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் 800-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதியதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமையை பொருத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்