Vembakottai Excavation: அடுத்த கீழடியாகும் வெம்பக்கோட்டை!அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காதணி கண்டெடுப்பு!
May 18, 2023, 08:40 PM IST
கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம்கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் ஆன காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் மற்றும் சங்கு வளையல் ஆகியவை அங்கு கண்டெடுக்கப்பட்டிருந்தது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதில் நுண்கற்கருவிகள், சங்கக்கால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை அடங்கும். இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. அதில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் கிடைத்துள்ளன.
முதற்கட்ட அகழாய்வில் இப்பகுதியில் சுமார் 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6 அன்று வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பார்வையிடும் வகையில் தொல்லையல் பொருட்கள் கண்காட்சி அகழாய்வு நடைபெறும் விஜய கரிசல் குளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த வெம்பக்கோட்டை அகழாய்வு கண்காட்சியில் சுடுமண் ஆட்டக்காய்கள், சுடுமண் விளையாடுப் பொருட்கள், சுடுமண் உருவங்கள், அடித்தளம், கற்கோடரி, நுண்கற்கால மூலப்பிருட்கள், சுடுமண் பதக்கங்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் புகைப்பான்கள், செவ்வந்திக்கல் மணிகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் பானைகள், கிண்ணங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வரும் வெம்பக்கோட்டையில், கடந்த மே 16ஆம் தேதி 3.9 செமீ நீளம், 1.4 செமீ அகலம், 191 மி.கிராம் எடையுள்ள யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கண்டெடுக்கப்பட்டது. அடுத்தநாளான 17ஆம் தேதி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்குவளையல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணாலான அழகிய காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள நிதி, மனிதவளம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வெம்பகோட்டையில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ள சுடுமண்ணாலான அழகிய காதணி! என ட்வீட் செய்துள்ளார்.