RN Ravi: ’திமுக நெருக்கடி எதிரொலி! 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!’ விரைவில் கூடுகிறது சிறப்பு சட்டமன்றம்?
Nov 16, 2023, 12:28 PM IST
”இதனை தொடர்ந்து மீண்டும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்டமசோதாக்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது”
பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட நாட்களாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது என கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்டமசோதாக்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி இருந்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், அடிபணிந்தார் ஆளுநர், அரசியல் சட்டத்தை மதிக்க கற்றுக் கொண்டார் ஆளுநர் என எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டு மக்களை முட்டாள் என்றும் தமிழ்நாடு அரசை ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் ஆளுநர் கருதி வந்தார்.
நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு அரசியல் சட்டத்தை ஆளுநர் படித்துள்ளார். இப்போது அந்த சட்டத்தின்படி நடந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார். இது திமுகவின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்திருக்க கூடிய முழு வெற்றி என கூறி உள்ளார்.