Bus Strike: ’பொங்கலின் போது போராட்டமா?’ போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Jan 10, 2024, 11:26 AM IST
“Bus Strike: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில். பொங்கல் பண்டிகையின் போது ஏன் இடையூறு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.”
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில். பொங்கல் பண்டிகையின் போது ஏன் இடையூறு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என கூறி பி ஃபாம் மாணவரான பால் இனியவன் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தொழிற்சங்கங்கள் தரப்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதமே போராட்டம் அறிவித்து நோட்டீஸ் கொடுத்து இருந்தாலும், ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை பொங்கலுக்குள் தர வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை ஏற்காத காரணத்தால்தான் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், மற்றபடி போராட்டம் செய்ய வேண்டும் என்ற கட்டாய நோக்கம் இல்லை என்றும், முறையாக நோட்டீஸ் கொடுத்தே போராட்டம் நடத்துவதால் இதனை சட்டவிரோதமாக கருத முடியாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு அரசுத் தரப்பில், பேச்சுவார்த்தை பல கட்டம் நடந்தது. பேச்சுவார்த்தை முற்றுப்பெறாத நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 19ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கூட போராட்டத்தை ஒத்திவைக்காமல், நேற்று முதலே போராட்டத்தை தொடங்கிவிட்டதால் இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பும், தொழிற்சங்கங்களும் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் தீர்வு காண அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது, மக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் செய்கிறீர்கள் என்றும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், கிராம மக்கள் சிரமம் அடைவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
போராட்டம் நடத்த உரிமை இல்லை என நீதிமன்றம் கூறவில்லை என்றாலும், பண்டிகை நேரத்தில் இது போன்ற போராட்டங்களை முன் எடுப்பது முறையற்றது என கருதுவதாகவும், ஊழியர்களுக்கு அகவிலைப்படி தர முடியுமா இல்லையா என்பது குறித்து பிற்பகலில் பதில் தரக்கூறி உத்தரவிட்டுள்ளனர்.