தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

Kathiravan V HT Tamil
May 20, 2024 10:19 PM IST

”Durai Murugan: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளது துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்”

’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!
’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

ட்ரெண்டிங் செய்திகள்

கள்ளமவுனம் கைவந்த கலை

அதில், கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல - பல்வேறு அரசியல் பிரச்சினைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வாசகத்திற்கு மறு உருவம் திரு. பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல! காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே திரு. பழனிசாமிதான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

காவிரி மேலாண்மை கூட்டம் மூலம் எதிர்ப்பு 

தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை - காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும்போதெல்லாம் அதை அரசியல்ரீதியாக, ஒன்றிய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடுமையாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு என்பதுதான் உண்மை. அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாற்றின் (“வட்டவடா” எனக் கேரளாவில் அழைக்கப்படுகிறது) உபநதி சிலந்தி ஆறு ஆகும். 

சிறுபாசனம் தொடர்பான விவரங்கள் சேகரிப்பு 

இதைப் பொருத்தவரை - சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்” எனத் தமிழ்நாட்டின் உறுப்பினர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார். 

உறுதியுடன் தமிழகம் எதிர்க்கும் 

இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து – தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல - அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சிலந்தி ஆறு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:- 

காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் இருந்தும் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அமராவதி ஆற்றுக்கு பாம்பாறு, சிலந்தி ஆறு, தேவாறு, சின்னாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கேரள அரசு கட்டி வருவது தான் சிக்கலுக்கு காரணம்.

இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பெருகுடா என்ற இடத்தில் தான் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் குடிநீர் தேவைக்காகவே தடுப்பணை கட்டப்படுவதாக கேரள அரசின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், அதன்பின் அந்த ஆற்றிலிருந்து அமராவதி ஆற்றுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. ஏற்கனவே, அமராவதியின் இன்னொரு துணை ஆறான பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரி என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இப்போது சிலந்தி ஆற்றிலும் தடுப்பணை கட்டப்பட்டால், அமராவதி ஆறும், அதன் அணையும் மணல் பாதையாக மாறி விடும். அமராவதியை நம்பியுள்ள கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55,000 ஏக்கர் நிலங்கள் கருகி பாலையாகி விடும்.

சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924&ஆம் ஆண்டு கையெழுத்தாகிய உடன்பாடு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி காவிரி ஆற்றின் குறுக்கேயும், அதன் துணை நதிகளின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டுவது குற்றம் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவது எவ்வாறு சட்ட விரோதமோ, அதேபோல் தான், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதும் குற்றம் ஆகும். ஆனால், இதை உணராமல், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பதைப் போலவே கேரளமும் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, கடந்த 2018&ஆம் ஆண்டில் மூன்றாவது தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது. அதைக் கண்டித்து அணைக்கட்டி என்ற இடத்தில் 11.03.20218 ஆம் நாள் எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தான் பவானி தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.

காவிரி துணை ஆறுகள் மற்றும் அவற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயன்றால், அதை முதலில் அறிந்து தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை வாயைத் திறக்கவேயில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொண்டது. கூட்டணி கட்சியான காங்கிரசின் நலனைக் கருதி, மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது. திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்