TOP 10 NEWS: ’ஓட்டு பிச்சை எடுக்கும் சீமான்! குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டம்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விமர்சனம், சீமான் ஒட்டுப்பிச்சை எடுப்பதாக அண்ணாமலை பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.வலுவிழக்கும் தாழ்வு மண்டலம்
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
2.மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
கோடியக்கரை அருகே ஆழ்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீன் பிடித்த போது அரிவாளால் வெட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு. தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜ்குமார். நாகலிங்கம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
3.சென்னை - பினாங்குக்கு விமான சேவை
சென்னை - மலேஷிய பினாங்கிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடங்குகின்றது. பினாங்கு தீவில் இருந்து சென்னைக்கு நேரடியாக இண்டிகோ விமானம் இயங்கப்பட உள்ளது.
4.புத்தக வாசிப்பு நடைபயணம்
சென்னையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடைபயணத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
5.ஆளுநருக்கு கி.வீரமணி கண்டனம்
ஆளுநர், அமைச்சரவையின் ஆலோசனையை பின்பற்றியே நடக்க கடமைப்பட்டவரே தவிர சுய அதிகாரம் கொண்டவரல்ல. உயர்க்கல்வித்துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது சட்டப்படி தவறே என தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம்.
6.நடுக்கும் ஈபிஎஸ் - தயாநிதி மாறன்
“புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி இழிவாகப் பேசிய அமித்ஷாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு நடுங்குகிறார், இதன் மூலம் அவர்களுக்கிடையே உள்ள கூட்டணி தெளிவாகத் தெரிகிறது” - சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு
7.ஆளுநர் ஒரு ட்ரபுல் மேக்கர்
“ஆளுநர் ரவி ஒரு ட்ரபுல் மேக்கர், எப்போதும் சர்ச்சைகளை உருவாக்கக் கூடியவர். விரைவில் ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும்.அமித் ஷாவுக்கு, அம்பேத்கர் மீதுள்ள ஆழ் மனது வெறுப்பு தற்போது வெளிப்பட்டுள்ளது”- விசிக தலைவர் திருமாவளவன் கருத்து.
8.ஓட்டுப்பிச்சை எடுக்கும் சீமான்
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று சீமானும், திருமாவளவனும் ஓட்டுப்பிச்சை எடுக்கின்றனர். நான் கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்ளூம் போது உதயநிதி ஸ்டாலின், தான் ஒரு இந்து என்று சொல்வதற்கு மட்டும் வாய் வருவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.
9.கேரள ஏஜெண்டுகளை தேடும் போலீஸ்
நெல்லை அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைதான நிலையில், தற்போது கேரள ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.
10.குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரிய விட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.