TOP 10 NEWS: ’அண்ணாவை புகழும் விஜய் முதல் உத்ரகாண்டில் தமிழர்கள் மீட்பு வரை!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: பேரறிஞர் அண்ணாவுக்கு விஜய் புகழாரம், கூட்டணி ஆட்சி கேட்கும் திருமாவளவன், விசிகவுக்கு திமுக பதில், உத்ராகண்ட்டில் சிக்கிய தமிழர்கள் மீட்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.உத்ராகண்டில் சிக்கிய தமிழர்கள் மீட்பு
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவர் என தலைமைச் செயலர் முருகானந்தம் தகவல். உத்தராகண்ட் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் ஊர் திரும்ப அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் உறுதி.
2.கூட்டணி ஆட்சி என்பது தவறல்ல - திருமா
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தவறல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேட்டி. தமிழ்நாட்டுக்குள் இது போன்ற கோரிக்கைகள் எழுப்புவதும் தவறில்லை. அதிகாரம் இல்லாதவர்கள் குரல் இது. விளிம்பு நிலையில் உள்ள மக்களின் குரல் இது. அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பதுதான் உண்மையான ஜனநாயகம் என கருத்து.
3.திருமாவளவனுக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதில்
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பொதுவெளியில் தான் பேசியுள்ளார். எங்களிடம் கேட்கவில்லை. திருமாவளவனின் கோரிக்கை குறித்து திமுக தலைவர்தான் முடிவெடுப்பார் என்று திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் பதில்.
4.கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை
தமிழகத்தில் 2026ஆம் தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. திராவிட இயக்கங்கள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்யும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து.
5.திருமாவளவன் மீது அன்புமணி விமர்சனம்
மது ஒழிப்பில் பாமக பிஎச்டி; திருமாவளவன் எல்.கே.ஜிதான் என அன்புமணி ராமதாஸ் விமர்சனம். எல்.கே.ஜி படித்தாலும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதாக திருமாவளவன் பதிலடி.
6.ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவின் எல்லையோர மாவட்டங்களான கோவை கன்னியாகுமரி உற்சாக கொண்டாட்டம்.
7.சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
சென்னையில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள். அனுமதிக்கப்பட்ட இடங்களில் பலத்த காவல்துறை கண்காணிப்பு.
8.அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மரியாதை.
9.அண்ணாவுக்கு விஜய் புகழாரம்
அண்ணா அவர்கள் பிறந்தநாளில் அவரது பணிகளை போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் அறிக்கை.
10.மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
இராமேசுவரத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு, பின்னர் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரை சிங்கள அரசு மொட்டையடித்தும், கைவிலங்கிட்டும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கழிவறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப் படுத்தியுள்ளது. சிங்கள அரசின் இந்த மனிதத் தன்மையற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா ரூ.50 ஆயிரம் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 7-ஆம் தேதி தண்டத் தொகையை கட்டியுள்ளனர். ஆனால், கடந்த 6-ஆம் தேதியே தண்டம் செலுத்தவில்லை என்று கூறி தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு இந்த கொடுமையையும், அவமதிப்பையும் இழைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்