Arnold Dix: உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியின் நிஜ ஹீரோக்களில் ஒருவர்... யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?
உத்தரகாசி சுரங்க மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோயிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்கள் பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் அனைவரும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஒட்டுமொத்த நாடும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டதை அவர்களது உறவினர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அபார வெற்றிக்கான பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்.
யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். புவியியலாளர், பொறியாளர் மற்றும் வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
