Sellur Raju: ’பலாப்பழத்தை தேடி ஈக்கள்தான் வரும்! அதிமுக தொண்டன் வரமாட்டான்’ ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜு பதிலடி!-flies come in search of jackfruit aiadmk charity will not come sellur rajus reply to ops - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Sellur Raju: ’பலாப்பழத்தை தேடி ஈக்கள்தான் வரும்! அதிமுக தொண்டன் வரமாட்டான்’ ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜு பதிலடி!

Sellur Raju: ’பலாப்பழத்தை தேடி ஈக்கள்தான் வரும்! அதிமுக தொண்டன் வரமாட்டான்’ ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜு பதிலடி!

Kathiravan V HT Tamil
Apr 19, 2024 02:45 PM IST

”தமிழ்நாடு என்பது திராவிட பூமி, இரண்டு இயக்கங்கள் தலைமையிலான கூட்டணியைதான் மக்கள் ஆதரிப்பார்கள். இரு கழகங்கள் கிளைதான் விரிந்து பறந்து உள்ளது”

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - கோப்புப்படம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - கோப்புப்படம்

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினர் உடன் வந்து வாக்கு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காலையில் எழுந்து வாக்கு சாவடி முகவர்களை எழுப்பிவிட்டு, அவர்களை அலார்ட் செய்துவிட்டேன். பின்னர் என்னுடைய ஜனநாயக கடமையை என்னுடையை குடும்பத்துடன் நிறைவேற்றி உள்ளேன். 

கேள்வி:- தேர்தலுக்கு பிறகு அதிமுக தேடி வரும் என ஓபிஎஸ் கூறி உள்ளாரே?

பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் செல்லுமே தவிர அதிமுக தொண்டன் செல்லமாட்டான். 

கேள்வி:- சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மக்களிடம் உள்ள ஆர்வம் நாடாளுமன்றத் தேர்தலில் இல்லையே?

நான் கேட்டவரை நன்றாக வாக்குப்பதிவு நடப்பதாக தேர்தல் அதிகாரி கூறினார். ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் ஒவ்வொரு விதமான நிலை இருக்கும். அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் வாக்காளர்களை அழைத்து வருகிறார்கள். மாலை 6 மணி வரை உள்ளதால் இப்போதே எதையும் கணிக்க முடியாது. எப்படியும் தமிழ்நாட்டில் 80 சதவீத வாக்குகள் பதிவாகும் என நினைக்கிறேன். 

பாஜக 400 சீட் வருமா?

அது ஆண்டவனுக்குத்தான் தெரியும், மக்கள் எந்த தீர்ப்பை தந்தாலும் ஏற்றுக் கொள்வோம். எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டு எடுக்க அதிமுக குரல் கொடுக்கும். ஒவ்வொரு மாநில கட்சியும் எந்த முடிவு எடுத்து உள்ளதோ அதைத்தான் நாங்கள் முடிவு எடுத்து உள்ளோம். 

இந்தியா கூட்டணியில் கூட யார் பிரதமர் என்று சொல்லவில்லை. பாஜக மட்டும்தான் மோடி! மோடி என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கும் மேல் உள்ள தலைமை அதை பற்றி சொல்லவில்லை. இரண்டு முறைக்கு மேல் பாஜகவில் ஒருவர் பாரத பிரதமராக இருக்க முடியாது என்று சொல்வார்கள்,ஆனால் அது எப்படி என்று தெரியவில்லை. 

கேள்வி:- அதிக சீட் ஜெயித்தால் யாருக்கு ஆதரவு தருவீர்கள்?

தமிழ்நாட்டுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு தருவோம். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மக்கள் எங்களை மிகப் பெரிய அளவில் வரவேற்கிறார்கள். மக்களே வந்து அதிமுகவுக்கு இரண்டு விரல்களை காட்டுகிறார்கள். அதிமுக சின்னம் மக்கள் மத்தியில் பதிந்து உள்ளது. 

கேள்வி:- தமிழ்நாட்டில் திமுக-அதிமுகவுக்கும்தான் போட்டியா?

தமிழ்நாடு என்பது திராவிட பூமி, இரண்டு இயக்கங்கள் தலைமையிலான கூட்டணியைதான் மக்கள் ஆதரிப்பார்கள். இரு கழகங்கள் கிளைதான் விரிந்து பறந்து உள்ள்ளது. எல்லா வாக்குச்சாவடிகளிலும் முகவர் போட்டு உள்ளோம். சில கட்சிகளுக்கு இது போன்ற கட்டமைப்பு இல்லை. இரு கழகங்களும் 52 ஆண்டுகள் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்து உள்ளோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.