Tamil Top 10 News: மின்வாரியம் எச்சரிக்கை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரை - இன்றைய காலை டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: மின்கட்டணம் தொடர்பாக மின்வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை, தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,286 கோடி ஒதுக்கீடு, மிக கனமழை எச்சரிக்கை உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Morning Tamil Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
மின்வாரியம் எச்சரிக்கை
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூகவலைதள பதிவில்,"நுகர்வோர்கள் ஜாக்கிரதை. தூண்டிலில் சிக்க வேண்டாம். இது மின்கட்டண மோசடியின் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ.03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர். பதற்றப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnebltd.gov.in மற்றும் செயலியில் சரிபார்க்கவும். எஸ்.எம்.எஸ். வாயிலாக வந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எஸ்.எம்.எஸ் வந்த எண்ணை அழைக்க வேண்டும். இதுதொடர்பாக சைபர் குற்ற எண் 1930-ல் புகார் அளிக்கவும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.100 நாணயத்தை வெளியிட உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், சென்னையில், மண்டல கடல் மாசகற்றும் மையத்தையும் ராஜ்நாத் சிங் திறந்து வைக்க உள்ளார்.
ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தால்.. அதிரடி உத்தரவு
மருத்துவமனை, ஹோட்டல்களில் ரூ.2 லட்சத்திற்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PAN எண் குறிப்பிடாமல் பெரியளவு பரிவர்த்தனை நடத்தக்கூடாது, ரொக்கமாக ரூ.2 லட்சத்திற்கு மேல் பரிமாற்றம் நடந்தால் அரசுக்கு தகவலளிக்க வேண்டும் என்ற விதிகளை பின்பற்றுவதில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ரொக்கப் பரிவர்த்தனையில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
எங்கள் சண்டை முடியவில்லை: வினேஷ் போகத்
பிரிஜ் பூஷனுக்கு எதிரான தங்களது நீண்ட சண்டை இன்னும் முடியவில்லை என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அது குணமாவதற்கு நேரம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவேனா அல்லது தொடர்வேனா என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,286 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்ட செலவினங்களுக்கான நிதியாக ரூ.9,286 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், புதிய பாதை, இரட்டை பாதை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நடைபெறும் 5 புதிய பாதை திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியில் பயணிக்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
மத்திய அரசு அதிரடி உத்தரவு
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அப்டேட் அளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்