Alcohol Prohibition: ’பூரண மதுவிலக்கு கொண்டு வருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது’ அமைச்சர் முத்துசாமி
TN Assembly 2024 Live: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார்.
பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம், படிப்படியாக மதுக்கடைகளை குறைப்பதே அரசின் எண்ணம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம், காவல், உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகின்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
ஜி.கே.மணி கேள்விக்கு அமைச்சர் பதில்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி , தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற விருப்பம் தமிழ்நாடு அரசுக்கும் உள்ளது. ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் தமிழ்நாட்டில் இல்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து மது வாங்கி வரும் நடவடிக்கைகள் உள்ளதை சுட்டிக்காட்டியும் அமைச்சர் முத்துசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக முதலமைச்சர் பதில்
முன்னதாக காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்.
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்தேன்.
சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன்.
அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.
குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது.
இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம் எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.