PTR vs Duraimurugan: ’இப்போ தெரியுதா தியாகராஜன்!’ பிடிஆரை கிண்டல் அடித்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!
TN Assembly 2024 Live: அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ’இப்போ தெரியுதா தியாகராஜனுக்கு, நாங்க நிதிகேட்கும்போது எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்போம்னு’ என கிண்டல் அடித்தார்.
’நாங்கள் நிதி கேட்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா தியாகராஜன்’ என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது.
மானியக் கோரிக்கை விவாதம்
இன்றைய தினம், காவல், உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகின்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
கீழ்பெண்ணாத்தூரில் ஐடி பார்க்
கேள்வி நேர விவாதத்தின் போது பேசிய கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள கடம்பை கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போதைக்கு ஐடி பார்க் உருவாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அங்கிருந்து 160 கிமீ தொலைவில் சென்னையில் சோழிங்கநல்லூர், 187 கிமீ தொலைவில் ஒசூர் ஆகிய இடங்களில் ஐடி பார்க் உள்ளதால், தற்போது புது ஐடி பார்க் துவங்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறினார்.
பின்னர் பேசிய கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ, கீழ்பெண்ணத்தூரில் இருந்து சென்னை, ஒசூர் அருகில் உள்ளதாக அமைச்சர் அவர்கள் கூறினார்கள். அங்கெல்லாம் இடம் கிடைப்பது கடினம். ஆனால் எங்கள் தொகுதியில் 140 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இது போன்ற இடங்களில் ஐடிபார்க் கட்டினால் வளர்ச்சிக்கு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
ஐடி துறைக்கு 119 கோடிதான் நிதி
இதனை தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிலம் கிடைப்பது கடினம் ஆனதுதான். அது உண்மை, ஆனால் குறுகிய நேரத்தில், குறுகிய செலவில் வேலை வாய்ப்புகளை ஐடி துறையால்தான் உருவாக்க முடியும். ஆனால் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பதான் எங்களால் பணி செய்ய முடியும். இந்த நிதியாண்டில் ஐடி துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு 119 கோடி ரூபாய். இதை பல்வேறுகளுக்கு ஒப்பிட்டுப்பார்த்தால் ஓரளவுக்குதான் செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்.
பிடிஆரை கலாய்த்த துரைமுருகன்
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ’இப்போ தெரியுதா தியாகராஜனுக்கு, நாங்க நிதிகேட்கும்போது எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்போம்னு’ என கிண்டல் அடித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்று நான் நிதி அமைச்சராக இருந்தபோதும், ஐ.டி துறைக்கு இந்த அளவுதான் ஒதுக்கீடு செய்தோம். நான் இருந்த போது ஜாஸ்தி, இப்போது குறைவு என்று கூறவில்லை. துரைமுருகன் அவர்களின் துறைக்கும் பல ஆயிரம் கோடி ஆண்டுதோறும் ஒதுக்கிக் கொண்டே இருக்கிறோம் என தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.