Tamil Nadu Assembly: ’மீன்பாசி குளங்களை ஏலம் விடாமல் குத்தகை விட முடியாது!’ அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
Tamil Nadu Assembly: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள குளங்களுக்கான மீன்பாசி குத்தகை உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க அரசு முன்வருமா? என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி.
ஒப்பந்தப்புள்ளி ஏதும் கோராமல் மீன்பாசி குத்தகைகளை விட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்றைய தினம், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல்கள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை, மீன்வளம், பால் வளத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
கேள்வி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள குளங்களுக்கான மீன்பாசி குத்தகை உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க அரசு முன்வருமா? என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின்படி, இனி வரும் காலங்களில் ஏரிகளில் மீன் பாசி குத்தைகளை ஏலம் விடும் நிகழ்வுகளில் குறைந்தபட்ச தொகை நிர்ணயம் செய்து பொது ஏல முறையில் ஒப்பந்த புள்ளி கோர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அரசுக்கு வருவாய் பெருக்கும் வகையில் பொது ஏல நடைமுறை மூலம் மீன்பாசி குத்தைகைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. எனவே மேற்காணும் தீர்ப்பின் அடிப்படையும், தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை சட்டம் 2000-இன் படியும், இனிவரும் நாட்களில் ஏலம் நடத்தாமல், மீனவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கோ, தனிநபர்களுக்கோ ஏரிகளில் மீன்பாசி குத்தகை விடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.
அதிமுக வெளிநடப்பு
முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்’ குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இன்றைய தினம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.
பலமுறை நாங்கள் குரல் கொடுத்தோம். இது மக்களின் உயிர் பிரச்னை, தினந்தோறும் மக்கள் இறந்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை எத்தனை பேர் மது அருந்தி உள்ளனர். எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள், இதுவரை எத்தனை பேர் இறந்து உள்ளனர். இப்போது சிகிச்சையில் உள்ளவர்கள் நிலை என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், பேச அனுமதி கேட்டோம். ஆனால் இன்றும் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார் என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9