Kallakurichi hooch tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi Hooch Tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!

Kallakurichi hooch tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Jun 29, 2024 02:57 PM IST

TN Assembly 2024 Live: திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என முதலமைச்சர் பேச்சு

Kallakurichi hooch tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!
Kallakurichi hooch tragedy: ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒருவர் கூட தப்ப முடியாது!’ பேரவையில் முதல்வர் ஆவேசம்!

காவல்துறை மானியக்கோரிக்கை 

காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேரவைக்கு நாங்கள் வருந்துள்ளோம். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று புகழ் மாலையைச் சூட்ட வேண்டும் என்று நான் உறுதி எடுத்து பயணம் தொடங்கினேன்.

மக்கள் முழு வெற்றியை தந்து உள்ளனர் 

எடுத்த உறுதியில் வென்று நூற்றாண்டு நாயகருக்கு புகழ்மாலை சூட்டிய பெருமையோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்துக்காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து, செய்கூலி சேதாரம் இல்லாமல் முழுமையான வெற்றியை வழங்கினார்கள். 

100 விழுக்காடு வெற்றி

ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி.  

சட்டமன்றத் தேர்தலில், ‘வாக்களித்த மக்கள் - வாக்களிக்காத மக்கள்’ என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

2026- தேர்தலிலும் வெல்வோம்!

வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம், இதனை மமதையோடு நான் சொல்லவில்லை; மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்.  

அவையின் மாண்புக்கும் குந்தகம்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள்.

கள்ளக்குறிச்சி மரணங்கள்! - எடுத்த நடவடிக்கை என்ன?

இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய 

  •  உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்தேன்.
  • சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன்.
  • அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.
  •  குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
  • கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது.
  •  இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
  •  சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.     
  • இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்  எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.