kallakurichi : கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi : கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!

kallakurichi : கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 19, 2024 09:53 PM IST

Kallakurichi : கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்திய 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!
கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!

மாவட்ட ஆட்சியர் மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ். பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை தற்காலிக பணிநீக்கம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "``இன்று (19-6-2024) கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, கள்ளக்குறிச்சி வட்டத்தில்‌, கருணாபுரம்‌ காலனியைச்‌ சேர்ந்த 26 நபர்கள்‌ வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல்‌ போன்ற உபாதைகள்‌ இருப்பதாகத்‌ தெரிவித்து, கள்ளக்குறிச்சி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தனது அறிக்கையில்‌ தெரிவித்துள்ளார்‌.

காவல்‌துறை மற்றும்‌ வருவாய்த்‌ துறையினர்‌ மேற்கொண்ட விசாரணையில்‌, மேற்படி நபர்கள்‌ பாக்கெட்‌ சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும்‌ என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில்‌ திரு.பிரவின்குமார்‌, வயது 26, நேற்று அதிகாலை 3 மணியளவில்‌ வயிற்று வலியின்‌ காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்‌. மேலும்‌, திரு சுரேஷ்‌, வயது 40 மற்றும்‌ திரு சேகர்‌, வயது 59 ஆகியோரும்‌ சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும்‌ அவர்களின்‌ உடல்கள்‌, உடல்‌ கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின்‌ காரணம்‌, உடல்‌ கூறாய்விற்குப்‌ பின்பு தெரியவரும்‌.

மேற்கண்ட 26 நபர்களில்‌, வடிவு மற்றும்‌ கந்தன்‌ ஆகிய இருவரும்‌ சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில்‌, மற்ற அனைவருக்கும்‌ கள்ளக்குறிச்சி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம்‌ மருத்துவக்‌ கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக்‌ கொண்ட மருத்துவர்‌ குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்‌.

இந்த மருத்துவக்‌ குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச்‌ சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல்‌, சேலம்‌ மற்றும்‌ திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும்‌, சிறப்பு மருத்துவர்‌ குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. மேலும்‌, 18 நபர்கள்‌ அவசரகால ஊர்தியின்‌ மூலமாக புதுச்சேரி ஜிப்மர்‌ மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம்‌ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. 12 அவசர கால ஊர்திகள்‌ கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவனையில்‌ தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைக்குத்‌ தேவையான அனைத்து மருந்துகளும்‌, விழுப்புரம்‌, சேலம்‌, திருவண்ணாமலை மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத்‌ திட்ட இயக்குநர்‌ திரு.கோவிந்தராவ்‌, இஆ,.ப., மற்றும்‌ மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்‌. மேலும்‌, பாக்கெட்‌ சாராயம்‌ விற்ற கோவிந்தராஜ்‌ என்கிற கண்ணுகுட்டி, வயது 49 என்ற நபர்‌ காவல்‌துறையினரால்‌ கைதுசெய்யப்பட்டுள்ளார்‌. அவரிடமிருந்து 200 லிட்டர்‌ கள்ளச்சாராயம்‌ கைப்பற்றப்பட்டு, அவை விழுப்பும்‌ மண்டல தடய அறிவியல்‌ ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில்‌, அதில்‌ மெத்தனால்‌ கலந்துள்ளதாகக்‌ கண்டறியப்பட்டுள்ளது.

முதலமைச்சர்‌ அவர்களுக்கு இந்த சம்பவம்‌ பற்றிய தகவல்‌ தெரிய வந்ததுடன்‌, உடனடியாக மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும்‌ பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ எ.வ.வேலு மற்றும்‌ மாண்புமிசூ சுகாதாரத்‌துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச்‌ சென்று சிகிச்சை பெற்று வரும்‌ நபர்களுக்குத்‌ தேவையான அனைத்து உதவிகளையும்‌ செய்வதற்சூ உத்தரவிட்டுள்ளார்கள்‌. இச்சம்பவம்‌ தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்‌ ஷ்ரவன் குமார்‌ ஜடாவத்‌ உடனடியாகப்‌ பணியிடமாற்றம்‌ செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்‌.எஸ்‌.பிரசாந்த்‌ அவர்கள்‌, புதிய மாவட்ட ஆட்சித்‌ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்‌.

மேலும்‌, கள்ளக்குறிச்சி மாவட்டக்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ சமய்‌ சிங்‌ மீனா  தற்காலிக பணிநீக்கம்‌ செய்யப்பட்டு,  ரஜத்‌ சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்டக்‌ காவல்‌ கண்காணிப்பாளராகப்‌ பணியமர்த்தப்பட்டுள்ளார்‌. அதோடு மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவைச்‌ சேர்ந்த, காவல்‌ துணைக்‌ கண்காணிப்பாளர்‌ தமிழ்செல்வன்‌, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவு காவல்‌ நிலைய ஆய்வாளர்‌,  கவிதா, திருக்கோவிலூர்‌ மதுவிலக்கு அமலாக்கப்‌ பிரிவு காவல்‌ நிலைய ஆய்வாளர்‌,  பாண்டி செல்வி, திருக்கோவிலூர்‌, உதவி காவல்‌ ஆய்வாளர்‌ பாரதி மற்றும்‌ அப்பகுதி காவல்‌ நிலைய ஆய்வாளர்‌ ஆனந்தன்‌, ஷிவ்சந்திரன்‌, உதவி ஆய்வாளர்‌, காவல்‌ நிலைய எழுத்தர்‌ பாஸ்கரன்‌, சிறப்பு காவல்‌ உதவி ஆய்வாளர்‌. மனோஜ்‌, காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌, திருக்கோவிலூர்‌ ஆகியோரும்‌ தற்காலிக பணி நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.  தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இவ்வழக்கினை தீர விசாரிக்கவும்‌, தக்க மேல்நடவடிக்கைக்காகவும்‌, உடனடியாக CBCID வசம்‌ ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்கள்‌." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் வேதனை

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,

"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.