தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly 2024: இந்து - இஸ்லாமியர்களின் கோயில் ஒற்றுமை பற்றி புத்தகம்! பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!

TN Assembly 2024: இந்து - இஸ்லாமியர்களின் கோயில் ஒற்றுமை பற்றி புத்தகம்! பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Kathiravan V HT Tamil
Jun 28, 2024 12:38 PM IST

”மதவாதத்தை தூண்ட வேண்டும் நோக்கில் முற்படும் சக்திகளை வீழ்த்தும் சக்தியாக முதலமைச்சர் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரத்தில் பனேசாய்பு திருக்கோயில் உள்ளது. இங்கு முதல் மரியாதை இந்துக்களுக்குதான். இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து தொழும் இடமாக இது உள்ளது”

TN Assembly 2024: இந்து - இஸ்லாமியர்களின் கோயில் ஒற்றுமை பற்றி புத்தகம்! பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!
TN Assembly 2024: இந்து - இஸ்லாமியர்களின் கோயில் ஒற்றுமை பற்றி புத்தகம்! பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உள்ள உறவுகள் குறித்த வரலாற்று தகவல்கள் புத்தகமாக கொண்டுபோய் சேர்க்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மானியக் கோரிக்கை விவாதம்

இன்றைய தினம் சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை, மதுவிலக்கு, காவல்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்து பேசி புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

செல்வப்பெருந்தகை கேள்வி 

சட்டப்பேரவையில் கேள்வி நேர விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,  இந்துக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் என்ன உறவு உள்ளது என்பதை பற்றி எல்லா ஆலயங்களிலும், கல்வெட்டுக்கள் உள்ளன, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துலுக்க நாச்சியார் கோயிலை ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலில் அமைந்து உள்ளது. தஞ்சாவூரில் உள்ள திருநாகேஸ்வரம் ஆலயத்தில் உள்ள் கல்வெட்டில் இஸ்லாமியர்கள் - இந்துக்கள் இடையே உள்ள தொடர்பு பற்றி கல்வெட்டு உள்ளது. கேரளாவில் எரிமேலியில் ஐய்யப்பனை பார்ப்பதற்கு முன்னர் பாபரை தொழுகை செய்ய வேண்டும். 

உங்கள் துறை சார்பாக இந்து- இஸ்லாமியர்கள் இடையே உள்ள உறவு குறித்து புத்தகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா?, இது காலத்தின் கட்டாயம், சிறுபான்மை மக்களை ஒடுக்கும் கூட்டம் இங்கே சுற்றிக் கொண்டு இருக்கிறது. இந்துக்களும், இஸ்லாமியர்களும் எப்படி இணக்கமாக இருந்து உள்ளனர்  என்பதை உங்கள் துறை சார்பாக தெரியப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பி இருந்தார். 

அமைச்சர் சேகர்பாபு பதில் 

இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆண்டாண்டு காலமாக, இஸ்லாமியர் - இந்துக்கள் நல்லுறவு பாதுகாக்கப்படும் கோயில்கள் தமிழ்நாட்டில் 20க்கும் மேல் உள்ளன. இந்த நடைமுறைகளை தகர்க்க வேண்டும், மதவாதத்தை தூண்ட வேண்டும் நோக்கில் முற்படும் சக்திகளை வீழ்த்தும் சக்தியாக முதலமைச்சர் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரத்தில் பனேசாய்பு திருக்கோயில் உள்ளது. இங்கு முதல் மரியாதை இந்துக்களுக்குதான். இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து தொழும் இடமாக இது உள்ளது. புதுக்கோட்டையில் காவல் தெய்வமாகவே ராவுத்தார் உள்ளார். அவரை தொழுத பின்னர்தான், இந்து சாமிகளை தொழும் நடைமுறை உள்ளது. புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தேர்வடத்தை இஸ்லாமியர்கள்தான் தொட்டு வணங்கி தொடங்கி வைக்கின்றனர். எம்மதமும் சம்மதமே என்று சொல்லும் முதல்வர் ஆட்சியில் நல்லுறவு பேணி காக்கப்படும். அனைத்து வரலாறுகளும் புத்தகமாக தொகுத்து வெளியிட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.