தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin: சுதந்திர தினத்துக்கு ஆவின் பாக்கெட்டுகள் வாழ்த்து செய்தி புறக்கணிப்பு - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Aavin: சுதந்திர தினத்துக்கு ஆவின் பாக்கெட்டுகள் வாழ்த்து செய்தி புறக்கணிப்பு - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 15, 2023 11:49 AM IST

அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்க துடிக்கும் தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை புறக்கணிப்பது ஏன்?. நாட்டின் 77வது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவினுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
ஆவின் பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுொவனம் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்து செய்தி வெளியிடுவது வழக்கமாகும்.

அவ்வாறான வழக்கத்தை கொண்டிருந்த தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் பாஜக உள்ளிட்ட மதவாத கட்சிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கும் கூட வாழ்த்து செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 15 இந்தியாவின் 77வது சுதந்திர தினமான இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிடாமல், வழக்கமான நடைமுறையை தவிர்த்து, முக்கியமான தேசிய தினத்தை புறக்கணித்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நடப்பாண்டின் ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் 74வது குடியரசு தினத்துக்கும், ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி தேசிய பால் தினமான கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்தாண்டு அந்நாளில் தேசிய பால் தினம் வாழ்த்து செய்தியும் வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகம் தற்போது 77வது சுதந்திர தினத்துக்கும் வாழ்த்து செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருப்பது தேசிய தினங்களை தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவது தெள்ள தெளிவாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கும், புதியதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் பல்வேறு விழா அரங்குகளுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு செலவில் கொண்டாடுவதற்கும் முனைப்பு காட்டும் தமிழக முதலமைச்சர் இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி, தேசிய தினங்களுக்கு மட்டும் வாழ்த்து செய்தி வெளியிடாமல் புறக்கணிப்பு வேலைகளை செய்யும் ஆவின் அதிகாரிகள் மீதும், அதனை கண்காணிக்க தவறிய பால்வளத்துறை அதிகாரிகள் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததும், புறக்கணிப்பு பணிகள் தொடர்கதையாக இருப்பதும் வேதனைக்குரிய விஷயமாகும்.

மத்தியில் ஆளுகின்ற, மாநிலங்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வரும் பாஜக மற்றும் அவர்களின் கைத்தடியாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு, திராவிடம் என்றாலே எட்டிக்காய் போல் கசப்பது போல் ஒருவேளை ஆவினுக்கு, குறிப்பாக திமுக அரசுக்கு தேசியம் என்றாலே கசக்கிறதா.? என தெரியவில்லை.

ஏற்கனவே இந்தியாவின் 74வது குடியரசு தினத்துக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்துக்கும், அதனை கண்காணிக்க தவறிய பால்வளத்துறைக்கும், நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு, தேசிய பால் தினம், இந்திய குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தேசிய தினங்களை புறக்கணித்தது போல் தற்போது இந்திய சுதந்திர தினத்துக்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வருங்காலங்களில் இது போன்ற புறக்கணிப்புகள் நடைபெறாமல் தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஆண்டுதோறும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்