பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தவர் முதல் இறுதிக் கட்டத்தை எட்டிய சாத்தான்குளம் வழக்கு வரை - டாப் 10 நியூஸ்
பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தவர், காவலர் தற்கொலை, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள், க்ரைம் செய்திகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த நபர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் வணிக வளாக பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கைதான மிதுன் என்பவர் அங்கு முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். ஆண்கள் கழிவறை தூய்மையாக இல்லை என அடிக்கடி பெண்கள் கழிவறையை இவர் பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், சிபிசிஐடி அதிகாரிகள் முன் 2வது முறையாக ஆஜரான பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
திருப்பத்தூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். ஆம்பூரை அடுத்த அயத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வாசு மின்சாரம் பாய்ந்த் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தயார் நிலையில் உள்ள சென்னை மாநகராட்சி!
அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும், நீர் தேங்கும் இடங்களில் அதனை உடனடியாக வெளியேற்ற 913 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார்கள் பொருத்த திட்டம், கடந்த மழையின்போது அதிகம் தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. 167 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1000க்கும் மேற்பட்ட உயரமான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் உயரமான மரக்கிளைகளை வெட்ட உத்தரவு, மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண்ணுக்கு அழைக்க கூடுதலாக 150 இணைப்புகள் ஏற்பாடு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீரன் திரைப்பட பாணியில் போலீசார் சம்பவம்!
தாம்பரம் அருகே கடந்த மார்ச் மாதம் கடைகளில் துளையிட்டு செல்போன்கள், ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட, ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்த இர்பான் (35) என்பவரை, அவரது கிராமத்தில் வைத்து தாம்பரம் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்துள்ளனர். செல்போன் சிக்னலை வைத்து சொந்த ஊரில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று, இர்பானை கைது செய்யும் போது உள்ளூர்வாசிகள் தடுக்க லாவகமாக பிடித்து டெல்லி வழியே சென்னைக்கு வந்துள்ளனர்.
காவலர் தற்கொலை
ஈரோடு, வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தற்கொலை செய்துகொண்டார். அம்மாபேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய செல்வகுமார் (34), தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை.
ரூ.1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு
ராமநாதபுரம் கடலாடியில் கடந்த 2009ம் ஆண்டு புதிய மின்சார இணைப்புக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான இளநிலை பொறியாளர் முருகன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது
விருதுநகரில் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி இன்று கைது செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான இவர் ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில், நிபந்தனையை மீறியதால் இன்று கைது செய்யப்பட்டார். கைதான விஜய நல்லதம்பி அதிமுக ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார்.
இறுதிக்கட்டத்தை எட்டிய சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இறுதி சாட்சியாக சிபிஐ விசாரணை அதிகாரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வருகிற 16 ஆம் தேதி ஆஜராக உள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா 16 ஆம் தேதி ஆஜராகிறார். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் வழக்கறிஞர்கள் சுக்லாவிடம் குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.
டாபிக்ஸ்