Mano Thangaraj : ‘பாஜக எதிர்ப்பு.. மோடி மீது கடும் விமர்சனம்..’ மனோ தங்கராஜ் மாற்றமும் ஆதரவாளர்கள் ஏமாற்றமும்!
Mano Thangaraj : ‘பால்வளத்துறையில் குறைபாடு இருக்கிறது, சர்ச்சைகள் இருக்கிறது, அதை விட நிறைய புகார்கள் இருக்கிறது. ஆனாலும் மேலே சொன்ன அவையெல்லாம் எழுந்த போது, மாற்றப்படாத மனோ தங்கராஜ், இப்போது நீக்கப்பட்டிருக்கிறார்’

TN cabinet : தமிழக அமைச்சரவை மாற்றத்தில், குறிப்பிடும் படியான இருமாற்றங்கள் கவனிக்கப்படாமல் போகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதால், அந்த பரபப்பில் இந்த விசயம் கவனம் பெறாமல் போகலாம். அது, பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டது தான். முன்பு, பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மாற்றப்பட்டு தான், மனோ தங்கராஜ் அத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த முறை அமைச்சரவை மாற்றத்தில், மனோ தங்கராஜூவிடம் இருந்து, அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
மற்ற அமைச்சர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர், மனோ தங்கராஜ். காரணம், அவருடைய கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு. தமிழக அமைச்சர்கள் மீது பாஜக குறி வைக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது கூட, பாஜகவை நோக்கி கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்தவர் மனோ தங்கராஜ். குறிப்பாக, பிரதமர் மோடி குறித்து மனோ தங்கராஜின் கடுமையான விமர்சனங்கள் கவனமாக பார்க்கப்பட்டன.