Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி!
Sathankulam Case: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதித்த நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாக இவர்களை சாத்தான்குளம் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீஸார் கடுமையாக தாக்கினர். இதனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், 5 தலைமைக் காவலர்கள் என 9 பேரை கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை விரைவில் முடிக்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை ஏற்று விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு காலக்கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காலக்கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே கைதானவர்களின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து தள்ளுபடியானதால் 9 பேரும் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். சிறையில் உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறேன். தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கொலையான ஜெயராஜ் மனைவி ஜெயராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை ஏற்று ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சார்பு ஆய்வாளர் ரகுகணேஷின் ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை தினமும் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்