TN Law And Order: தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல; கலை மாநிலம்! சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வினோத பேட்டி!
எல்லாமே சொந்த காரணங்களுக்காக அல்லது அவர்களுக்குள்ளே இருக்கக்கூடிய முன் விரோதத்தின் அடிப்படையில், பகைமை அடிப்படையில், ஒருவருக்கொருவர் முன்விரோதம் காரணமாக தான் இந்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றனவே தவிர, இதில் எதுவுமே இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெடுக்கும் அளவுக்கு எந்த சம்பவங்களும் கிடையாது.

தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல கலை மாநிலம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொடர் தோல்வியின் விரக்தியினால், இன்றைக்கு மாண்புமிகு சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்கின்ற ஒரு புதிய குற்றச்சாட்டை வைத்திருக்கின்றார்கள்.
கொலை மாநிலம் அல்ல; கலை மாநிலம்
அவருக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல, கலை மற்றும் அறிவுசார் மாநிலம் தான் தமிழ்நாடு. இன்னும் சொல்லவேண்டும் என்றால், சமூக விரோதிகளை களையெடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை அவர் உணர்ந்து கொண்டாக வேண்டும். அவருடைய ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியோடு தொடர்புடையவை. ஆனால், இந்த ஆட்சியில் எந்தச் சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடைய சம்பவங்களாக நடைபெறவில்லை.