தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ennore Gas Leak: வாயுக் கசிவு எதிரொலி ..எண்ணூர் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு

Ennore Gas Leak: வாயுக் கசிவு எதிரொலி ..எண்ணூர் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு

Karthikeyan S HT Tamil
Dec 27, 2023 11:31 AM IST

எண்ணூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு அமோனியம் வாயுக் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

எண்ணூர் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு
எண்ணூர் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

வாயுக் கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினா். 

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். தொடர்ந்து பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் வாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆலை வாயுக் கசிவு ஏற்பட்ட பைப்லைனை அடையாளம் கண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான நடைமுறையின்படி ஆலை இயங்கிக் கொண்டிருக்க டிச.26 11.30 மணியளவில் கடற்கரையோரத்தில் உள்ள அமோனியா பைப்லைனின் அசாதரண நிகழ்வைக் கண்டோம். இதனையடுத்து எங்களது குழுவினர் அமோனியா பைப்லைனை தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியாா் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாயுக் கசிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்னா், ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்