’செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்! ரெய்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் எங்கே!’ ED-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள்.
செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பெண்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?, நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விகளுக்கு கூட அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை என உச்சநீதிமன்றம் சாடி உள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை வாதம்
செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில், அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேதா ஆஜராகி வாதாடினார்.
செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இருந்து பென் டிரைவ் போன்ற டிஜிட்டல் ஆவணங்களை கைப்பறியதாக கூறி இருந்தனர்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து ‘அது எங்களுடையது கிடையாது. அதில் என்ன உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது’ என்று கூறி இருந்தனர்.
உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
இந்த விசாரணையில் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி உள்ளது. பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை எங்கிருந்து எடுத்தீர்கள், அதில் இருந்த விஷயங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி சார்ந்ததுதானா? என கேள்வி எழுப்பினர்.
பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது, அதில் தான் சார்ந்த ஆவணங்கள் எதுவும் இல்லை. நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்
தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால் அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள்.
செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணக்களை பற்றி கேட்கிறோம். நீங்கள் அதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. உங்களிடம் இன்றைய தினம் இது சம்பந்தமாக பதில் இல்லை என்றால் நாளை வாருங்கள், பதிலோடு வாருங்கள் விசாரிப்போம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
நடந்தது என்ன?
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோசடி வழக்குப்பதிவு
தொடர்ந்து முறைகேட்டு புகாரின்படி, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சம்மனும் அனுப்பியது. ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில்பாலாஜி. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை எனக் கோரிக்கை வைத்தது. 2022 ஆம் ஆண்டு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.