Raj Kundra: பிட்காயின் முதலீடு மோசடி: தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் ரூ.97.79 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
Raj Kundra assets: நடிகை ஷில்பா ஷெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஜுஹு பிளாட் உட்பட பி.எம்.எல்.ஏ இன் கீழ் ராஜ் குந்த்ராவின் ரூ .97.97 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ .97.79 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (இ.டி) வியாழக்கிழமை முடக்கியது.
வேரியபிள் டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் பல்வேறு எம்.எல்.எம் முகவர்களுக்கு எதிராக மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை தாக்கல் செய்த பல முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியது.
2017 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.6,600 கோடி மதிப்புள்ள பிட்காயின்கள் வடிவில் மாதத்திற்கு 10% வருமானம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான நிதியை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"உக்ரைனில் பிட்காயின் சுரங்க பண்ணையை அமைப்பதற்காக கெய்ன் பிட்காயின் போன்சி மோசடியின் சூத்திரதாரி மற்றும் விளம்பரதாரர் அமித் பரத்வாஜிடமிருந்து ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களைப் பெற்றார்" என்று அமலாக்க இயக்குநரக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
அமித் பரத்வாஜ் வசூலித்த குற்ற வருமானத்தில் இருந்து பிட்காயின்கள் பெறப்பட்டன. இந்த ஒப்பந்தம் நிறைவேறாததால், தற்போது ரூ.150 கோடிக்கு மேல் மதிப்புள்ள 285 பிட்காயின்களை குந்த்ரா இன்னும் வைத்திருக்கிறார் என்று அமலாக்க இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிம்பி பரத்வாஜ், நிதின் கவுர் மற்றும் நிகில் மகாஜன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ் மற்றும் மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கெய்ன் பிட்காயின் போன்ஸி திட்டத்தின் விளம்பரதாரர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றி, தவறான முறையில் சம்பாதித்த பிட்காயின்களை தெளிவற்ற ஆன்லைன் வாலெட்களில் மறைத்ததாக அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியது.
முன்னதாக, நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது நிதி நிலை குறித்தும், தன்னுடைய கணவர் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு, ஆபாச வீடியோக்களை தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு சம்பாதித்ததாகவும், கொரோனா காலத்தில் பண நெருக்கடியை சந்தித்த நடிகைகளிடம் பண ஆசைக் காட்டி, அவர்களை வீடியோவில் நடிக்க வைத்து, வெளிநாட்டு மொபைல் ஆப்களில் அவர் வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த புகாரில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் இவர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நெட்டிசன்கள், ஷில்பா ஷெட்டியையும் ‘ஆபாச மன்னனின் மனைவி’ என ட்ரோல் செய்தனர்.
மேலும் பணத்திற்காகவே ஷில்பா ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டதாகவும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இதற்கு ஷில்பா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிலளித்து இருக்கிறார்.
டாபிக்ஸ்