Erode MP Ganesamoorthy: மதிமுக எம்.பி கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி! கோவையில் அவசர சிகிச்சை!
”தற்போது சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்”
மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேச மூர்த்தி வெற்றி பெற்று இருந்தார். ஐந்தாண்டுகள் எம்.பியாக இருந்த கணேச மூர்த்திக்கு இந்த தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை சீட் வழங்கவில்லை.
ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டார். சுயநினைவை அவர் இழந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மீது வருத்தமா?
திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த கணேச மூர்த்தி வைகோ தனியாக பிரிந்த போது அவருடன் சென்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் தரப்படும் என கணேச மூர்த்தி இருந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கட்சித் தலைமை முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக மன அழுத்தத்தில் இருந்த கணேச மூர்த்தி, இன்று காலை வீட்டில் இருக்கும் போது மாத்திரகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.