தமிழ் செய்திகள்  /  Elections  /  Durai Vaiko Who Was Announced As The Trichy Candidate On Behalf Of The Mdmk Then Gave An Interview

Trichy Candidate Durai Vaiko: மதிமுக சார்பில் திருச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரை வைகோ; மகிழ்ச்சியாக அளித்த பேட்டி!

Marimuthu M HT Tamil
Mar 18, 2024 05:16 PM IST

Trichy Candidate Durai Vaiko:திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக -திமுக கூட்டணியினரின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதிமுக சார்பில் திருச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரை வைகோ; மகிழ்ச்சியாக அளித்த பேட்டி!
மதிமுக சார்பில் திருச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரை வைகோ; மகிழ்ச்சியாக அளித்த பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

துரை வைகோ, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மதிமுக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை. வைகோ போட்டியிடுவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், ‘’நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். இல்லையென்றால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொதுச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்’’எனத் தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் சார்பில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினர் ஆனார் என்னும் நிலையில், தற்போது துரை வைகோ திமுக கூட்டணி சார்பில், திருச்சியில் போட்டியிடுகிறார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ கூறுகையில், ‘’திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு எங்களது இயக்கத் தோழர்கள் பாடுபடுவார்கள். அதேநேரம், திருச்சி மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிடவேண்டும் என மதிமுக நிர்வாகிகள் மற்றும் இயக்கத்தோழர்கள் வலியுறுத்தினர். அனைவரும் ஒருமனதாக நான் நிற்கவேண்டும் என்று வலியுறுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்றத்தேர்தல் ஒன்றியத்தில் யார் அதிகாரத்துக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை நிலைநிறுத்தும் தேர்தல். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத பாஜக கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்துவிடக் கூடாது. பாஜக கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும். நிறைவேற்றாத வாக்குறுதிகள், விலை உயர்வு, முறையற்ற பொருளாதாரக் கொள்கையை களைய, திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும்’’என்றார். 

முன்னதாக, இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 8.3.2024அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுவது என இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்திற்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ‘’திமுகவுடன் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்க உள்ளோம். பின்னர் பெரியார் சதுக்கம், அண்ணா சதுக்கம், கலைஞர் சதுக்கம் சென்று மரியாதை செலுத்துவோம். நாளைய தினம் தோழமை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம்’’ எனக் கூறினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகுதியில் மதிமுக சார்பில் ஈரோடு கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக ஆதரவு உடன் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

இந்த நிலையில் தற்போது மதிமுகவுக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகோவின் ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் அடுத்தாண்டு நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் ராஜ்யசபா சீட் தர திமுக தரப்பு வாய்மொழி உறுதி அளித்துள்ளது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்