Sonia Gandhi On Exit poll: ’கலைஞரை சந்தித்தது அதிஷ்டம்! நாளை நாங்கள்தான் ஜெயிப்போம்!’ சோனியா காந்தி பேட்டி!
Sonia Gandhi's first reaction to exit poll: 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளில் காட்டப்பட்டதற்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
இந்தியா கூட்டணியின் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாளையொட்டி புதுடெல்லி திமுக கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜம்மூ காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, கிரிராஜன், வில்சன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
’கலைஞரின் ஞான வார்த்தைகளால் பயன் அடைந்தேன்’
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், "டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழாவில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
"பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அவர் சொல்வதைக் கேட்டேன், அவருடைய ஞான வார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளில் இருந்து பயனடைந்தேன். அவரை சந்தித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து சோனியா கருத்து
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "எங்கள் முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுவதற்கு முற்றிலும் எதிரானவை என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்" என பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கலைஞருக்கு ராகுல் காந்தி புகழாரம்
ராகுல் காந்தி கூறுகையில், தமிழ்நாட்டின் சிறந்த தலைவரான கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை காத்தவர் என்று கூறினார்.
மேலும் அவரது எக்ஸ் சமூகவலைத்தள பதிவில், “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் 'கலைஞர்' மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர். அவரது மரபு சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவரது வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்கள் மீது நீடித்த முத்திரையை பதித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களை வழங்கியிருந்தாலும், பெரும்பாலானவை 350 க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளன. இது அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான 272 இடங்களை விட மிக அதிகம்.
காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரித்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகள் ஒரு "கற்பனை" என்றும், எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றும் கூறி உள்ளன.
டாபிக்ஸ்