Subramanian Swamy: ’மோடி அரசு கவிழும்! மார்ச் மாதம் மீண்டும் தேர்தல் வரும்!’ பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு!
Subramanian Swamy Predicts Modi Govt's Fall in March: பாஜக முதலில் ஆட்சி அமைத்து இருக்க கூடாது. எதிர்க்கட்சியாக சில நாட்கள் அமர்ந்து இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியால் நீண்ட நாட்களுக்கு பதவியில் இருந்து இருக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.
வரும் மார்ச் மாதம் வரை கூட மோடி அரசு தாண்டாது, மீண்டும் தேர்தல் வரும் என்றும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.
ஜால்ரா போடுபவர்களுக்கு அமைச்சர் பதவி
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ள அவர், பாஜக முதலில் ஆட்சி அமைத்து இருக்க கூடாது. எதிர்க்கட்சியாக சில நாட்கள் அமர்ந்து இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியால் நீண்ட நாட்களுக்கு பதவியில் இருந்து இருக்க முடியாது. அவருக்கு ஜால்ரா போடும் ஆட்களைத்தான் அதிகம் அமைச்சர் ஆக்கி உள்ளனர்.
பாஜக பெரும்பான்மை பெறாது என்று நான் ஆரம்பம் முதலே கூறிவந்தேன். ஆனால் 400 இடங்களில் வெல்வோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால் இப்போது இரண்டு கட்சிகள் உடன் சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளனர்.
ஆட்சி நிற்காது! மார்ச்சில் மீண்டும் தேர்தல்!
இதுபோன்ற அரசு எப்போதும் நிற்காது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவுக்கு புதிய தேர்தல் வரும் என்று நான் நம்புகிறேன். விஷேஷமான கொள்கைகளுக்காக பாஜகவை நாங்கள் உருவாக்கினோம். ஆனால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை கூட்டணியில் சேர்த்த பிறகு நம்மால் எப்படி இந்துத்துவா பற்றி பேச முடியும். இந்துத்துவா பற்றி பேச பாஜகவுக்கு தைரியம் இல்லை.
கூட்டணி கட்சிகள் சென்றுவிடும்
சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிவிப்பு வரும் முன், காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணியில் இருந்தார். இதுபோல் நியாயம் இல்லாமல் அரசியல் செய்யக் கூடாது. இந்த அரசு நீண்ட நாள் நீடிக்காது. கூட்டணிக்கு வந்து உள்ள இருவரும் சென்றுவிடுவார்கள். இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்கள் என்று அவர்களே பாஜக மீது குற்றம்சாட்டுவார்கள் என கூறி உள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நாகேந்திரன் 3.75 லட்சம் வாக்குகள் பெற்றார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், ”தமிழக பாஜக உறுப்பினரை அமைச்சராக மோடி தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அவரது அனைத்து தமிழ் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நாகேந்திரன் 3.75 லட்சம் வாக்குகள் பெற்றார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதுதான் மோடி - தன் நிழலுக்குக் கூட பயப்படுகிறார்” என சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்து உள்ளார்.
40 தொகுதிகளிலும் தோல்வி
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 165620 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் பூருஸிடம் தோல்வி அடைந்தார்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய ராபர்ட் ப்ரூஸ் 502296 வாக்குகளை பெற்றார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 336676 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89601 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் சத்யா 87686 வாக்குகளையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.