Modi: ‘மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக கூடாது! ஆனால் இது நடக்கும்!’ பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி!
“திமுக அரசை கவிழ்ப்பதற்கான அவசியம் தற்போது இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி”
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக வரக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர் சந்திப்பு
கேள்வி:- தமிழக தேர்தல் களம் திமுக-பாஜக என்று மாறி உள்ளதாக கூறுகிறார்களே?
கனவு எல்லோருக்கும் இருக்கு; எது உண்மை என்பதை இப்போ சொல்ல முடியாது.
கேள்வி:- பாஜக 400 இடத்திற்கு மேல் வெற்றி பெறும் என்று சொல்கிறார்களே உங்கள் கருத்து என்ன?
400 இடமா? மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்கள் கிடைத்தால் போதும்.
கேள்வி:- நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவாரா?
அவரு வரக்கூடாது, அவரை தோற்கடிக்கனும்.
கேள்வி:-தமிழ்நாட்டில் நடப்பது மும்முனை போட்டியா? இருமுனை போட்டியா?
அமைப்பு இருக்க வேண்டும், வேட்பாளரை எல்லா இடத்திலும் நிற்க வைத்து பணம் தந்து விளம்பரம் செய்யலாம். ஆனால் மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்று இப்போ சொல்ல முடியாது.
கேள்வி:-நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும், ஆனால் மோடி பிரதமராக வரக்கூடாது. அவர் இரண்டு முறை பிரதமர் ஆகிவிட்டார். ஆனால் செய்ய வேண்டியதை செய்யவில்லை. சீனா 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள் ஆனால் எதுவுமே செய்யவில்லை. பொருளாதார வளர்ச்சி ஏதும் இல்லை, ஆனால் விளம்பரத்தில் அது செய்துவிட்டோம், இது செய்துவிட்டோம் என்கிறார். நான் பேராசிரியராக இருந்தவன், நமது பொருளாதர அமைப்பு மோசமான அமைப்பில் உள்ளது.
கேள்வி:- மோடி பிரதமர் ஆக கூடாது என்றால் அடுத்த பிரதமர் யார்?
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு யார் வருவார் என்று கவலைப்பட்டார்கள், எதற்காக அந்த கவலை, யாராவது ஒருவர் வருவார். மோடிதான் பிரதமர் ஆக வர வேண்டும் என்று கட்சி சார்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கட்டாயம் ஜெயிப்பார்.
கேள்வி:- தமிழிசை தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுகிறாரே?
அது என்னுடைய தலைவலி இல்லை; என்னிடம் எல்லோரும் பயப்படுகிறார்கள். மோடி என்னை தூரம் வைத்துவிட்டார்.
தமிழக தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை தருமா என்று தெரியாது. பாஜக தலைமை கேட்டுக் கொண்டால் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வேன்.
கேள்வி:-மத்தியில் சர்வாதிகாரம் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?
அவர்கள் கட்சியில் எத்தனை பைத்தியக்காரர்கள் உள்ளார்கள். அவர் கட்சியில் உள்ள ராஜீவ் காந்தி என்ற நபர் பிராமணர்களை படுகொலை செய்வோம் என்றான். ஆனால் அவன் எதுவும் செய்யவில்லை, நான் திமுக ஆட்சியை 2 முறை கவிழ்த்து உள்ளேன். ஆனால் தற்போது அந்த தேவை இல்லை.