’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்
”Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்”

ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு கண்ணீரும் கானல் நீரான இனத்திற்கு, தூரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமும் புதிய நம்பிக்கையையும், மகிழ்வினையும் அளிக்கிறது.
சனநாயக வழியில் ஈழ விடுதலை
ஈழ இனப்படுகொலை நடைபெற்ற 15 ஆம் ஆண்டு நினைவுநாட்களை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினரான வைல்லி நிக்கல் சக 6 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை இனக்கொடுமைகளுக்கு சனநாயக வழியில் நிரந்தரத் தீர்வுகாண ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அதிமுக்கிய தீர்மானத்தைப் பேரவையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.