தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ntk Symbol: ’நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!’

NTK Symbol: ’நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!’

Kathiravan V HT Tamil
Mar 22, 2024 12:24 PM IST

”நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு”

மைக் சின்னம்
மைக் சின்னம்

ட்ரெண்டிங் செய்திகள்

2016ஆம் ஆண்டு முதல் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 

பின்னர் நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. 

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவது, 31,08,906 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீகிதம் 6.72 ஆக உயர்ந்தது. 

பறிபோன கரும்பு விவசாயி சின்னம்!

நாம் தமிழர் கட்சியிடம் இருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த சின்னத்தோடு தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. 

சின்னம் கிடைக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். தாமதம் செய்ததால் விண்ணப்பம் செய்த வேறு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் நாம் தமிழர் கட்சி மனு செய்து இருந்தது. 

இதனை தொடர்ந்து ’சீமானின் சின்னம் என்ன?’ என்ற வாசகத்துடன் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி கடந்த 20ஆம் தேதி அன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்திற்கு பதிலாக மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ’மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சிக்கு ’அரிக்கேன் விளக்கு’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதற்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ’மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை நாம் தமிழர் கட்சியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.  நாம் தமிழர் கட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சி சின்னத்திற்கு வாக்கு கேட்டு கேட்டு பரப்புரை செய்யாமல் உள்ளனர். 

WhatsApp channel