விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமும், விலகாத மர்மங்களும்!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்ச கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்தநிலையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் எனக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபாகரன் பிறப்பு:
1954 ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் வல்வெட்டித்துறையில் சிவபக்தரும் காந்தியவாதியுமான வேலுப்பிள்ளை- பார்வதி அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர்தான் பிரபாகரன். சிறுவயதில் இருந்து தந்தையின் அறவழிக் கருத்துகளை உள்வாங்கி வளர்ந்தார் பிரபாகரன். பின்னாட்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுவதாக எண்ணிய அவர், அதனால் கோபம் கொண்டு தமிழர் போராட்டங்களில் பங்கேற்கத் துவங்கினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம்:
பிரபாகரன் முதலில் தமிழ் புது புலிகள் என்ற இயக்கத்தை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் என தமது பெயரை மாற்றியது அந்த இயக்கம். பல்வேறு சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்தவர்கள், ஒரே இயக்கமாக இணைந்தார்கள். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்றானது.
பிரபாகரன் மறைவு:
பிரபாகரனின் வாழ்க்கை முழுவதுமே ரகசியங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எதிரிகளிடம் பிடிபடாமல் இருக்கவும் படுகொலை செய்யப்படாமல் இருக்கவும் மிகவும் கவனமாக திட்டமிட்டு அவர் காடுகளில் மறைவான வாழ்க்கை நடத்தியதாக கூறப்படுகிறது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் உச்ச கட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்தது.
விலகாத மர்மம்:
பிரபாகரன் மரணத்தை சுற்ற ஏராளமான கேள்விகள் இன்று வரை எழுப்பப்பட்டு வருகின்றன. அது பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றியதுதான். நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவம் கொண்டவரை புலிகள் வெளி உலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்கும் இடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று கூறப்பட்டு வருகிறது. இதை விடுதலை புலிகள் அமைப்புக்கு மிக நெருக்கமானவர்களும் சொல்வதுண்டு.
விடுதலை புலிகள் யுக்தி:
இலங்கையில் போர் உச்சம் அடைந்தபோது கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களை கசியவிட்டு ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் கடல் பரப்பின் மீது திசை திருப்பி, பிரபாகரனை வெளிநாடுகளுக்கு தப்பிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. பிரபாகரன் இறப்பை இலங்கை ராணுவத்தை வைத்து அறிவித்தும் கூட புலிகளின் ராஜா தந்திரம் என்றும் சொல்லப்படுகிறது. இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகம் இருந்தாலும், அப்போதைய சூழலில் இப்படியொரு அறிவிப்பை அறிவிக்க வேண்டிய நெருக்கடி அந்த நாட்டு அரசுக்கு இருந்ததாகவே சொல்லப்படுகிறது.
பிரபாகரன் மீண்டும் வருவார்?
பிரபாகரன் மீண்டும் வருவார் என்று கருத்து சொல்லிக்கொண்டிருந்த தமிழ் தலைவர்களும் அவர் இருக்கிறாரா? இல்லையா? என்று குழப்பத்தில் இருந்த மக்களுக்கும் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் எனக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்:
ஈழப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கிற முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரபாகரன் பற்றிய உண்மை அறிவிப்பு எனப் பேசத் தொடங்கிய பழ. நெடுமாறன், தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்.
பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார்; எப்போது வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.