தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin : ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு.. மக்கள் விரோத செயல் - பால் முகவர் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி!

Aavin : ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு.. மக்கள் விரோத செயல் - பால் முகவர் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி!

Divya Sekar HT Tamil
Jul 25, 2023 11:30 AM IST

Aavin price hike : ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் விலையை 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு கிலோ பன்னீர் விலை 450 இலிருந்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் பாதாம் மிக்ஸ் விலை 100 ரூபாயிலிருந்து 120 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த விலை உயர்வு அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022ல் மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. 

குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100.00ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு அதன் விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் 3 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் விரோத செயலாகும்.

எனவே மக்கள் நலன் கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பால் கொள்முதல் உயர்வுக்கேற்ற வகையில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்