தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Arudhra Scam: ஆருத்ரா மோசடி வழக்கு..நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸார் !

Arudhra Scam: ஆருத்ரா மோசடி வழக்கு..நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸார் !

Karthikeyan S HT Tamil
May 03, 2023 11:05 AM IST

Arudhra Scam: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ்
நடிகர் ஆர்.கே.சுரேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 9,255 பேர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். 

ஆனால், உறுதி அளித்தபடி ஆருத்ரா கோல்டு நிறுவனம் பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷ்க்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து ஆர்.கே.சுரேஷூக்கு பணபரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவினர் பல முறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதை எதிர்த்து ஆர.கே.சுரேஷ் சார்பில் தொடரப்பட்ட மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் துபாயில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதன் மூலம் விமான நிலையங்களில் ஆர்.கே.சுரேஷ் வந்து இறங்கும் போதே விமான நிலைய அதிகாரிகள் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் முன்பு பாஜக பிரமுகர்கள் 2 பேர் சமீபத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். முன்னதாக, ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகள் ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point