தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Protest In Hosur Demanding Permission For Ox-killing Ceremony - Police Baton Creates Tension

எருது விடும் விழாவிற்கு அனுமதி கோரி ஒசூரில் போராட்டம - போலீஸ் தடியடியால் பதற்றம்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 02, 2023 12:46 PM IST

எருது விட மனுமதி மறுத்ததால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

ட்ரெண்டிங் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எருது விடும் விழாவிற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் விழா குழுவினர் ஒரு வாரத்திற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு செவ்வாய் கிழமை இரவு வரை அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான மாடுபிடி வீரர்களும் அப்பகுதியில் குவியத் துவங்கினர்.

ஆனால், எருது விடும் விழாவை நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளும், போலீசாரும் அங்கு திரண்டிருந்தவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

இதனால் விழாவில் ஆர்வமுடன் பங்கேற்க வந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆவேசமடைந்த இளைஞர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்டு அந்த சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதைதொடர்ந்து அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட முன்வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியும் கூட்டத்தை கலைத்தனர். சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் படிப்படியாக போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்