Ban For OPS: அதிமுக அடையாளங்களை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தத் தடை: இடைக்காலத் தீர்ப்பை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்!
Ban For OPS: அதிமுக சின்னம் போன்ற அடையாளங்களை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
Ban For OPS: அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு விதித்த தடையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவின் சின்னம், கொடி, லெட்டர் பேட், அலுவலக முகவரி, அதிமுக வண்ணம் கொண்ட கரைவேட்டி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அமர்வு இன்று இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவின் கரைவேட்டியைக் கூட இனி கட்டக் கூடாது என அதிமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர் இன்பதுரை, இந்த தீர்ப்புக்குப் பின், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் இன்பதுரை அளித்த பேட்டியில், ‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், அலுவலக முகவரி, அதிமுக வண்ணங்களைக் கொண்ட கரைவேட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒரு வழக்கைத் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் திரு. பன்னீர்செல்வம் வகையறாக்கள், இதுபோன்ற அதிமுகவின் அடையாளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்பது வழக்குத்தொடுத்து இருந்தார்கள்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், அலுவலக முகவரி, அதிமுக வண்ணங்களைக் கொண்ட கரைவேட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தக்கூடாது என ஒரு நிரந்தரத் தடையை விதித்துள்ளார்கள். இதுதொடர்பாக மூன்று சுற்று வழக்குகள் இருந்தன.
அதிமுகவின் பொதுக்குழு எடுத்த முடிவின் அடிப்படையில்தான், பொதுச்செயலாளர் ஆனார், எடப்பாடியார். அதன்பின், அதிமுக விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு, எடப்பாடியார் பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார். அவர் புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். ஏற்கனவே சிறப்புத் தீர்மானம் மூலமாக 11.7. 2022ஆம் ஆண்டில், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியிருந்தோம்.
அதனை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூன்று சுற்றுகளில், இந்த நடைமுறையினை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவைக் கூட்டக்கூடாது என ஓபிஎஸ் அணியினர் வழக்குத்தொடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று தோற்றுவிட்டார்கள். அதன்பின், கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஒரு வழக்கினை ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்தனர். ஆனால், மூன்று விதமான தீர்ப்புகளில் அது செல்லும் எனத் தீர்ப்புவந்தது.
அதன்பின், பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஒரு வழக்குத்தொடர்ந்தார்கள். இந்த வழக்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், தேர்தல் ஆணையம் இது செல்லும் என தனது இணையதளத்தில் பதிவேற்றிவிட்டது. இதன்மூலம், அதிமுக எடப்பாடியார் தலைமையில் இயங்குவது உறுதியானது.
அதன்பின்னும், ஓபிஎஸ் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிக்கொள்வது சட்டப்படி ஏற்கத் தக்கதல்ல. இதுதொடர்பாக நாங்கள் செய்த இடைக்கால வழக்கில் அதிமுக சார்புடைய அடையாளங்களைப் பயன்படுத்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு சிலர் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் அதிருப்தியான அதிமுக தரப்பு நிர்வாகிகள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் காவல் நிலையப் புகார்கள் தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்தோம்.
இந்நிலையில் அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அமர்வு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் தவிர, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், அலுவலக முகவரி, அதிமுக வண்ணங்களைக் கொண்ட கரைவேட்டிகள் உள்ளிட்ட ஓபிஎஸ் வகையறாக்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பு அளித்துள்ளனர்.
அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இயங்குகிறது. கர்நாடகத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குத் தான் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை மீறுவது என்பது, நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகிவிடும். யார் வேண்டும் என்றாலும் மேல் முறையீடு செல்லலாம். ஆனால், அதிமுக யார் வசம் உள்ளது, எடப்பாடி பழனிசாமியிடம் தான். அவ்வாறு இருக்கையில் இந்த கேள்வி தேவையற்றது’’ என முடித்துக்கொண்டார்.