Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறேனா?’ ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்! ஆனால் இது நிச்சயம்!-former cm o panneer selvam denied reports that he was going to boycott the parliamentary elections - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறேனா?’ ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்! ஆனால் இது நிச்சயம்!

Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறேனா?’ ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்! ஆனால் இது நிச்சயம்!

Kathiravan V HT Tamil
Mar 15, 2024 03:44 PM IST

”ஓபிஎஸ் தரப்பு நாடாளுமன்றத்தேர்தலை புறக்கணிப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியான நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்”

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

பாஜக உடன் கூட்டணி அமையாத நிலையில் தனது ஆதரவளர்கள் உடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். 

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக உடன் தொடர்து பேசுகிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி, வேண்டும் என்றே இது போன்ற வதந்திகள் பரப்பட்டு வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்ட உடன் கூட்டணி குறித்த அனைத்து விவரங்களையும் நானே அறிவிப்பேன் என ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் "இரட்டை இலை" சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து "இரட்டை சிலை" சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்தி மோடி அவர்களால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என ஓபிஎஸ் கூறி உள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை நாளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக கூட்டணியை பொறுத்தவரை புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, தமாகா, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளார். 

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ள நிலையில் இதுவரை ஓபிஎஸ் - பாஜக கூட்டணி உறுதி ஆகவில்லை. 

கன்னியாகுமரியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.