தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: ‘தேசியக் கட்சிகள் நம்மை துரும்பாக பார்க்கிறார்கள்’ எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

EPS: ‘தேசியக் கட்சிகள் நம்மை துரும்பாக பார்க்கிறார்கள்’ எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Oct 18, 2023 09:49 PM IST

“இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடிந்ததா?”

சங்கரன் கோயிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சங்கரன் கோயிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த மண்ணில் இருந்து மறைந்து இருக்கலாம் ஆனால் அவர்கள் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.

அண்ணாவின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அண்ணா திமுக என்ற இயக்கத்தை எம்ஜிஆர் நாட்டுக்கு அடையாளம் காட்டினார். திமுக என்பது கட்சி அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. திமுகவுக்கு சேர்மேன் ஸ்டாலின், இயக்குநர் உதயநிதி.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர் ரிப்பன் வெட்டுகிறார்.

திருநெல்வேலி மாவட்டதில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அதிமுகதான் தோற்றுவித்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலகங்களை கட்ட அதிமுக நிதி ஒதுக்கீடு செய்தது. இப்போது அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார்.

விடியா திமுக ஆட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. சளி தொல்லைக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றால் வெறிநாய் கடிக்கு ஊசி போடுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசின் மீதான வெறுப்பை உதயநிதி ஸ்டாலின் ‘சனாதனம்’ என்று சொல்லி திசைத்திருப்புகிறார். ஊழல் செய்வதற்கு திராவிட மாடல் என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் இந்த அரசின் தாரக மந்திரம்.

அதிமுக தொடந்து அழுத்தம் கொடுத்ததால்தான் தற்போது ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி உள்ளது. அது கூட அனைவருக்கும் கொடுக்கவில்லை.

பாஜகவின் ’பி டீம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது.

இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடிந்ததா?, மாறி மாறி ஆட்சிக்கு வரும் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு மக்களை பற்றி கண்டுகொள்வதில்லை. நம்மை ஒரு துரும்பாகத்தான் பார்க்கிறார்கள்.

அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான கூட்டணி அமைக்கப்பட்டு வெற்றி பெறும்.

IPL_Entry_Point