EPS: ‘துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்த திமுக’ - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps: ‘துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்த திமுக’ - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

EPS: ‘துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்த திமுக’ - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Marimuthu M HT Tamil
Feb 10, 2024 06:15 PM IST

துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்தது திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளதாவது, ‘’சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, அம்மாவின் ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையம் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டது. நாளடைவில் கோயம்பேடு பேருந்து நிலையமும் அதன் சுற்றுப்பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. எனவே, அம்மாவின் அரசு கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்திலிருந்தும், வேலூர், திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தும் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக அம்மாவின் ஆட்சியில் மாதவரம் பேருந்து நிலையம் செயல்படத் துவங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும்போல் இதர மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி செயல்பட்டு வந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்ல கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளது போன்று சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்து வசதி, மெட்ரோ ரயில் வசதி, வாடகை ஷேர் ஆட்டோ, ஆட்டோ, சீருந்து வசதிகள், உணவு விடுதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அமையும் வகையில் எங்கள் ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.

ஆனால், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று ஸ்டிக்கர் ஒட்டி அவசர கதியில் இந்த விடியா திமுக அரசு தைப் பொங்கலுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்துவிட்டது.

சென்னையில் வசித்து வரும் வெளி மாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலைக் கொண்டாட தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்வார்கள். இந்த ஆண்டு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் வசதி இல்லாமல், பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கே சென்றடைய முடியவில்லை. ஓரளவு வசதி படைத்தவர்கள் பெரும் செலவில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை சீருந்து மூலமாக கிளாம்பாக்கத்தைச் சென்றடைந்த நிலையில் அங்கும் போதுமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படாத நிலையில், உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளுமின்றி பெரும்சிரமத்திற்குள்ளாயினர். பலர் தைப் பொங்கலுக்கு தங்கள் ஊர்களுக்குக்கூட செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினுள் உணவக வசதி, பணம் எடுக்கும் ATM மிஷின் வசதி, டீ, காபி, பால் விற்பனை நிலையங்கள், தண்ணீர் வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல், அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் கோபத்தை இந்த விடியா திமுக அரசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள குறைகளை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் சுட்டிக் காட்டி பேட்டி அளித்துள்ளேன். சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்து நகரப் பேருந்து வசதி இல்லாமல், மெட்ரோ ரயில் வசதியுமின்றி, தனியார் வாடகை வாகனங்களுங்களுக்கு அதிக அளவு வாடகை கொடுத்து தங்களது குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடையும் பயணிகள், தாங்கள் அனுபவித்த கடும் சிரமங்களை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளனர். 

இதை, இந்த விடியா திமுக அரசும், அதிகாரிகளும் பொருட்படுத்தவில்லையோ என்று பொதுமக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். பொதுவாக, பயணிகள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்வதைத்தான் பெரும்சிரமமாக கருதுவார்கள். ஆனால், சென்னைவாசிகளை அவர்களது இருப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடைவதையே பெரும் சிரமமாகக் கருத வைத்துவிட்டது. இந்த நிர்வாகத் திறமையற்ற விடியாதிமுக அரசும், அதன் பொம்மை முதலமைச்சரும் நேற்று முன்தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அதிக அளவு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பேட்டி அளித்திருந்தார். 

அவரது பேட்டியை நம்பி, நேற்று (9.2.2024) இரவு தங்களது குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள், போதுமான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், இன்று (10.2.2024) காலை வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் படுத்துறங்கி அவதியுற்ற காட்சிகளையும், தங்களது ஊர்களுக்கு உடனடியாக பேருந்துகளை விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகளையும், குறிப்பாக திருச்சிக்குச் செல்லும் பயணிகள் சாலை மறியல் செய்த காட்சிகளையும் அனைத்து ஊடகங்களும், சமூக ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டி உள்ளன.

மக்கள் ஓரளவுக்குத்தான் பொறுமை காப்பார்கள். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்று முதுமொழி ஒன்று உண்டு. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் நகரப் பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி, பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.