Anbumani Ramadoss: ’பட்டியலின மக்கள் ஆதரித்தால் தலித்தை முதல்வர் ஆக்குவோம்!’ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி!
பாமகவுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலைக்குதான் அதை கொடுத்தோம். 1998ஆம் ஆண்டிலேயே இதை நாங்கள் செய்தோம்.
ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் எங்களை ஆதரித்தால் தலித் ஒருவரை முதலமைச்சர் ஆக்கத் தயார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து!
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், சுதந்திர தினமான இன்றைய நாளில் முதலமைச்சருக்கு நான் வைக்கும் கோரிக்கை தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி கணக்கெடுப்பை எடுங்கள். சமூகநீதியில் நீண்டகாலம் போராடி பெற்ற 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு என்றைக்கு விசாரணைக்கு வந்தாலும் நமக்கு ஆபத்துதான்.
புள்ளி விவரங்கள் எங்கே என்பதுதான் நீதிபதிகள் கேட்கும் முதல் கேள்வியாக உள்ளது. இது ஏதோ வன்னியர், மீனவர், தேவர், முக்குலத்தோர், கவுண்டர்களின் பிரச்னை கிடையாது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான வளர்ச்சி பிரச்னை இது.
பட்டியல் இன சமுதாயத்திற்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு 14 சதவீதம்தான் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கிடைத்து வரும் 30 சதவீத இட ஒதுக்கீடு 24 சதவீதம் மட்டும்தான் கிடைக்கும். 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்து வரும் எம்பிசி சமூகத்திற்கு 14 சதவீதம்தான் கிடைக்கும்.
சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்
இந்த பிரச்னையை சரி செய்ய மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.
இந்த அதிகாரம் சாதாரண பஞ்சாயத்து தலைவருக்கே உள்ளது. ஆனால் முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்திலேயே பொய் சொல்கிறார்கள். அவருக்கு மனசு இல்லை, திமுகவுக்கும், சமூகநீதிக்கும் சம்பந்தமே கிடையாது என்றார்.
கேள்வி:- எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு தலித் முதலமைச்சர் ஆக முடியாது? என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளாரே?
தமிழ்நாட்டில் பட்டியலின சமூகம் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம். இது வெறும் பேச்சு கிடையாது. பாமகவுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலைக்குதான் அதை கொடுத்தோம். 1998ஆம் ஆண்டிலேயே இதை நாங்கள் செய்தோம். ஆனால் திமுக 1999ஆம் ஆண்டுதான் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். எங்கள் கட்சியில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பொதுச்செயலாளர் ஆக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. பட்டியல் இன சமூகத்திற்கு அதிகம் செய்தது மருத்துவர் ஐயாவும், பாமகவும்தான்.
நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் 22 ஆண்டுகளாக பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால் ஆல் இந்தியா மெடிக்கல் கோட்டாவில் நான் தான் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். தாம்பரத்தில் உள்ள சித்த மையத்திற்கு பண்டிதர் அயோத்திதாசர் பெயரை நான்தான் வைத்தேன். அவருடைய சிலையையும் அங்கு வைத்து உள்ளேன்.
தோராட் கமிட்டி என்று ஒன்றை உருவாக்கி இந்தியாவில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களுக்கு ஏதேனும் பாகுபாடு இருந்தால் சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு முதன் முதலில் பாமகதான் குரல் கொடுத்தது. அன்றைய முதலமைச்சர் கலைஞரை வலியுறுத்தி கொடுக்க செய்தது எங்கள் ஐயாதான். தமிழ்நாட்டில் ஒரு நன்மை நடக்க வேண்டும் என்றால் ஒரு மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் எங்களால்தான் ஏற்படும்.
சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசிடம்தான் வலியுறுத்தி வருகிறோம். 2026-ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துமா என்ற சந்தேகம் உள்ளது. நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை கேட்கிறோம். இதனை மாநில அரசுதான் எடுக்க முடியும். எம்பிசியில் உள்ள முடித்திருத்தும் சமூகம் மற்றும் சலவை தொழிலாளர்கள் சமூகத்திற்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.