’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!-pmk leader anbumani demands a cbi inquiry into the death of congress district president jayakumar thanasingh - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Kathiravan V HT Tamil
May 04, 2024 07:03 PM IST

”காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்”

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரி உள்ளார்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரி உள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மகிழுந்து அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவரது உடலை படம் பிடிப்பதற்குக் கூட காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஐயத்தை உறுதி செய்திருக்கிறது.

ஜெயக்குமாரை கடந்த 3 நாட்களாகவே காணவில்லை. இது தொடர்பாக அவரது மனைவியும், மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என கூறி உள்ளார். 

சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜெயக்குமார் தன்சிங்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தன்சிங் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

எங்கள் தலைமை இதை சும்மாவிட்டாது! செல்வப்பெருந்தகை!

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், எங்கள் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் புகாரை ஏற்று நேர்மையான முறையில் விசாரணை நடத்த காவல்துறையிடம் கோரி உள்ளோம். பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு எடுக்க சொல்லி உள்ளோம்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே இந்த மரணம் எப்படி நடந்து என்பது தெரியவரும். அவரது மரணத்தில் எழும் சந்தேகங்களுக்கு காவல்துறை நேர்மையான விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். யார் தவறு செய்து இருந்தாலும், சட்டம்தனது கடமையை செய்யும். கட்சி ரீதியாகவும் எங்கள் விசாரணையை நாங்கள் மேற்கொள்வோம்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.