அரசு பஸ் பயணத்திலும் ‘லைவ் லொக்கேசன்’ வசதி – மொபைல் ஆப் மூலம் அறியலாம்
Live Location : அரசு பஸ் பயணத்திலும் இனி லைவ் லொகேஷனை தெரிந்துகொள்ளலாம். அதற்கு மொபைல் ஆப் வசதியும், பேருந்துகள் குறித்த அனைத்து விவரங்களும் தெரிந்துகொள்ள அரசு பஸ்களுக்கு இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்யும் சுமார் 1.70 கோடி பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான பொது இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் நேரம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்த தகவல்கள், அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை விவரங்கள், இயக்குநர்கள் குழு, போக்குவரத்து கழகங்களின் அமைப்பு, அவற்றின் பயணிகள் சார்ந்த சேவைகள், இயக்க வரம்பு, GST எண்கள், புகைப்படத் தொகுப்பு மற்றும் தொடர்பு எண்கள் ஆகிய விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்
பயணிகள் தங்கள் குறைகள், புகார்கள் பயணம் தொடர்பாக தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து வருகை மற்றும் இயக்க நேரம் குறித்த விவரங்கள், வழித்தட தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.