Mettur Dam: ‘ஜூன் 12 இன்று! திறக்கப்படாத மேட்டூர் அணை!’ என்ன செய்யலாம்! அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஐடியா!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடுத்தமாத இறுதியில் தான் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படியே நடந்தால் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமாகும் என மருத்துவர் ராமதாஸ் ட்வீட்

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்படாதது வருத்தம் அளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேதனை தெரிவித்து உள்ளார்.
திறக்கப்படாத மேட்டூர் அணை
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ஆம் தேதியாகிய இன்று, நடப்பு குறுவை பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 14.08 டி.எம்.சியாக இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்க இது போதுமானது அல்ல.
தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது 90 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு குறைந்து 15,000 கன அடிக்கும் கூடுதலாக நீர்வரத்தும் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது குறித்து சிந்திக்க முடியும். கர்நாடக அணைகளில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்றைய நிலவரப்படி 37.03 டி.எம்.சி மட்டும் தண்ணீர் இருப்பதாலும், கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளுக்கும் சேர்த்தே வினாடிக்கு 5468 கன அடி வீதம் தான் தண்ணீர் வருகிறது என்பதால் அங்கிருந்தும் காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.