ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறாரா விஜய்? தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த மூவ் என்ன?
திமுக மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜகவினர் இதற்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ள நிலையில், தானும் பிரதான எதிர்கட்சி என்பதை முன்னிறுத்த, விஜய்யும், ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

அக்டோபர் 27 ம் தேதி கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தான், தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் பேச்சாக இருந்து வருகிறார். நேரடியாக, ‘தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான்’ என மேடையில் பிரகடனப்படுத்திய தவெக தலைவர் விஜய், தான் யாருக்கு எதிராக களம் காணப் போகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவித்தார்.
தவெக தலைவரின் அடுத்த மூவ்?
மாநாடு முடிந்த பின், சில தீர்மானங்களையும் அவர் நிறைவேற்றினார். இருப்பினும் மாநாட்டிற்கு பிறகு அவர், மீடியா முன்பும், மக்கள் முன்பும் வரவில்லை. இருந்தாலும், அவர் பற்றிய பேச்சுகள் பரவலாக இருந்து வருகிறது. விஜய்யின் அடுத்த மூவ் என்ன? அவர் என்ன செய்யப் போகிறார்? அவரது கட்சி என்ன செய்யப் போகிறது? என்கிற மில்லியன் டாலர் கேள்விகள் பலரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மக்களை எப்படி நேரடியாக சந்திக்கப் போகிறார்? அரசியலுக்கான அவரது அடி, எங்கிருந்து தொடங்கப் போகிறது? என்கிற கேள்விகள், அரசியல் வல்லுனர்களிடத்திலும் இருக்கிறது.
இதற்கிடையில், விஜய் தரப்பில் வேறு ஒரு ஐடியா இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. திமுக மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜகவினர் இதற்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ள நிலையில், தானும் பிரதான எதிர்கட்சி என்பதை முன்னிறுத்த, விஜய்யும், ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.