Budget: ’பாஜக கூட்டணிக்கு என்ன 25 எம்.பியா கொடுத்து இருக்கீங்க பட்ஜெட்ல தமிழ்நாடு பெயர் வர!’ விட்டு விளாசிய அன்புமணி!
PMK leader Anbumani Ramadoss: பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என்றும், பட்ஜெட்டில் வழக்கமாக இடம்பெறும் திருக்குறளும் இல்லை, தமிழ்நாடும் இல்லை என கூறி இருந்தார்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றால் 25 எம்.பிக்களை ஜெயித்து கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் சார்பில் முதல் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
9 முன்னுரிமைகள்
ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என தெரிவித்த அவர், காலநிலையை எதிர்க்கும் விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்ற அவர், உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.
பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்
பட்ஜெட் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்வதற்காக பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்ய பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் சாதாரண இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் முந்தைய பட்ஜெட் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை காப்பி அடித்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என்றும், பட்ஜெட்டில் வழக்கமாக இடம்பெறும் திருக்குறளும் இல்லை, தமிழ்நாடும் இல்லை. இதனால் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மொத்தம் 48 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு எதுவும் வந்து இருக்காதா?. பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களுக்கும் பெயரை சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பெயர் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.
கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டுக்கு அதிக ரயில்வே திட்டங்கள் வந்து உள்ளன. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றால் 25 எம்.பிக்களை ஜெயித்து கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு எந்தெந்த துறைக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து விரிவான தகவல்களை உங்களுக்கு சொல்வேன் என கூறினார்.