தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Yes Yes என்றே சொல்ல விரும்புகிறேன்!-அமைச்சர் சிவசங்கர் பதிலால் அவையில் சிரிப்பலை

Yes Yes என்றே சொல்ல விரும்புகிறேன்!-அமைச்சர் சிவசங்கர் பதிலால் அவையில் சிரிப்பலை

Manigandan K T HT Tamil
Apr 05, 2023 12:53 PM IST

Minister S.S.Sivasankar: 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடியது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடியது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்ப துறைகளின் அமைச்சர்கள் பதலளித்தார்கள்.

அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்தார். அப்போது, கேட்பவர் எஸ்.எஸ்.பாலாஜி பதிலளிப்பவர் எஸ்.எஸ்.சிவசங்கர். எனவே, பதிலும் Yes Yes என்றே சொல்ல விரும்புகிறேன் என பதிலளிக்க அவையில் சிரிப்பலை எழுந்தது.

"எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுவட்ட வழித்தடத்தில் பேருந்து வசதி கோரியுள்ளார். ஏற்கனவே, சென்னை மாநகராட்சியில் இதுபோன்ற பேருந்துகள் இயக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், போதிய வருவாயும் கிடைக்கவில்லை. எனவே, அதுபோன்ற வழித்தடத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

எனவே தற்போதைக்கு சுற்றுவட்ட வழித்தடத்திற்கு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகத்தில் அதுபோன்ற குறிப்பு ஏதும் இல்லை" என்று பதிலளித்தார் அமைச்சர் சிவசங்கர்.

பின்னர், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி மற்றொரு கேள்வியை எழுப்பி பேசுகையில், "கேளம்பாக்கம் என்பது ஈஸிஆர் சாலைக்கு செல்லக் கூடிய மையப்பகுதி. ஜிஎஸ்டி, ஓஎம்ஆர் சாலையும் வந்து இணையக் கூடிய பகுதி. அங்கே அருகில் பல கல்லூரிகள் இருக்கின்றன. விஐடி, ஹிந்துஸ்தான் கல்லூரி, செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, எஸ்எஸ்என் கல்லூரி ஆகியவை இருக்கின்றன.

அருகில் கோவளம், முட்டுக்காடு, மாமல்லபுரம் போன்ற சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. எனவே இந்தத் தடங்களில் பேருந்துகள் இயக்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறேன். எனவே மீண்டும் இந்த கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பின்னர், அதற்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் அப்பாவு, எஸ்.எஸ்.சிவசங்கரை கேட்டுக் கொண்டார்.

பின்னர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்துப் பேசியதாவது:

சிப்காட் சிறுசேரியை எஸ்.எஸ்.பாலாஜி விட்டுவிட்டார். அதையும் இணைத்துக் கொள்ளலாம். அந்தப் பகுதி முழுமையும் நானும் அறிந்த பகுதி. ஊருக்கு செல்லும்போது திருப்போரூர் வழியாகவே செல்கிறேன். அந்தப் பகுதி முழுவதும் நன்கு இணைக்கப்பட்ட பகுதி. தாம்பரத்திலிருந்து 11 பேருந்துகள் இயங்குகின்றன. பிராட்வே-திருப்போரூர், தாம்பரம்-மாமல்லபுரம் என பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, சுற்றுவட்டப் பகுதிகளை இந்தப் பேருந்துகளே இணைப்பதால் தேவையான போக்குவரத்து வசதிகள் இந்தப் பகுதிகளில் இருக்கிறது என்றார் அமைச்சர் சிவசங்கர்.

பின்னர், அடுத்த கேள்வியை எம்எல்ஏ பாலாஜி எழுப்பினார். அப்போது அவர், சென்னை மாநகர பேருந்து 519 டி தற்போது தையூர் வரை இயக்கப்படுகிறது. அதை காயார் பகுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். அந்தப் பகுதி மிகவும் பின்தங்கி இருக்கக் கூடிய பழங்குடியின மக்கள், மாணவர்கள் வசிக்கக் கூடிய பகுதி. 

தற்போது மானாமதி வரை இயக்கப்படக் கூடிய பேருந்து சேவையை திருக்கழுக்குன்றம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்த மினி பஸ் திட்டத்தையும் மீண்டும் கொண்டு வர அரசு பரிசீலிக்குமா என்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் பாலாஜி.

எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி
எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி

இதற்கு பதிலளித்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "குறிப்பிட்ட வழித்தடங்களை பேரவை உறுப்பினர் பாலாஜி எழுதித்தருமாறு கோருகிறேன். கேட்பவர் எஸ்.எஸ்.பாலாஜி பதிலளிப்பவர் எஸ்.எஸ்.சிவசங்கர்... எனவே, பதிலும் Yes Yes என்றே சொல்ல விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த மினி பஸ் திட்டத்தால்தான் குக்கிராமங்களுக்கும் அரசு பேருந்து சேவை சென்றது என்றார் அமைச்சர் சிவசங்கர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்