Tamilisai: ஆளுநர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா எதிரொலி! சிபி ராதா கிருஷ்ணனுக்கு ஜாக்பாட்!
”தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது”

தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடலாம் என ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
