Seeman: இந்தியாவின் குப்பைத் தொட்டியா தமிழகம்? - பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்!-seeman condemned pm modi to open a prototype fast breeder reactor in kalpakkam - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman: இந்தியாவின் குப்பைத் தொட்டியா தமிழகம்? - பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்!

Seeman: இந்தியாவின் குப்பைத் தொட்டியா தமிழகம்? - பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்!

Karthikeyan S HT Tamil
Mar 04, 2024 12:44 PM IST

கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்

கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள ஈனுலைக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், அதிவேக ஈனுலையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பற்ற திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈனுலைகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தொடங்கிய நாடுகளே கைவிட்டுவிட்ட நிலையில் பாஜக அரசு அதனை இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தொடங்குவது தமிழர்களை அழித்தொழிக்கவே வழிவகுக்கும்.

மக்கள் நலத்தையும், மண்ணின் வளத்தையும் நாசப்படுத்த கூடிய கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிய காலம்தொட்டே நாம் தமிழர் கட்சி அணுவுலைகளைக் கடுமையாக எதிர்த்து வருவதுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற மாற்று மின்உற்பத்திப் பெருக்கத்துக்கு மாறவும் வலியுறுத்தி வருகிறது. மேலும், அணு உலை கழிவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியையும் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் சாராசரியாக வெளியாகும் 27000 கிலோ எடையுள்ள அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor-AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் ஏறத்தாழ 48000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை.

இக்காலகட்டத்துக்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகம் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நிலம் மாறிவிடும். இதனைக் கருத்திற்கொண்டே கடந்த 2019-ம் ஆண்டு கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அரசு முடிவு செய்தபோதும், கடந்த 2021-ம் ஆண்டு புதிய அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி வழங்கியபோதும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்ததுடன், தமிழகம் முழுவதும் தொடர்ப் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது.

ஆனால், மக்கள் எதிர்ப்பினைத் துளியும் பொருட்படுத்தாது, எதேச்சதிகாரப்போக்குடன் கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைக்கான தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதித்தது இந்திய ஒன்றிய அரசு. நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளாத நிலையில், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவு அணுவுலைகளையே மூட வேண்டுமென்று கோரிக்கை வைத்துவரும் நிலையில் தற்போது அதைவிடப் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் 500 மெகாவாட் ஈனுலையை கல்பாக்கத்தில் தொடங்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

அறிவியலில் வளர்ந்த வல்லாதிக்க நாடுகளே அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும்போது, நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை பெற்றிடாத இந்தியா, தமிழகத்தில் அடுத்தடுத்து அணுவுலைகளை அமைத்து வருவது, நேரடியாக தமிழர்கள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கின்ற சூழலியல் போரேயாகும். ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, ஈனுலை, அணுக்கழிவு மையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத் திட்டங்களையெல்லாம் தமிழகத்தின் மீது திணிப்பதன் மூலம் பாஜக அரசு இந்தியாவின் குப்பைத்தொட்டியாகவே தமிழகத்தை மாற்றியுள்ளது. பாஜகவினைக் கடுமையாக எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஈனுலையை தமிழகத்தில் திறப்பது குறித்துத் திட்டமிட்டு அமைதிகாப்பது ஏன்? இதுதான் பாஜகவிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்கும் செயல்முறையா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, கல்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஈனுலையை உடனடியாகக் கைவிடுவதோடு, கட்டுமானப் பணிகளை நிறுத்தவேண்டுமென இந்திய அரசினை வலியுறுத்துகின்றேன். மேலும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு பேராபத்தை விளைவிக்கக் கூடிய ஈனுலைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, அதனைத் திறக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாதென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.